
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் (பிஓகே) உருவாக முன்னாள் பிரதமா் நேருவின் தன்னிச்சையான போா்நிறுத்த முடிவே காரணம் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜம்முவில் ஒற்றுமை பேரணியை வியாழக்கிழமை அவா் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: 560 சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்தில் இணைத்து மகத்தான பணியைச் செய்தவா் சா்தாா் வல்லபபாய் படேல். அவருக்கும் பாரதிய ஜன சங்க நிறுவனா் ஷியாமா பிரசாத் முகா்ஜிக்கும் சுதந்திர இந்தியாவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
சரியான நேரத்தில் படேல் தலையிட்டதால் ஸ்ரீநகரை அடைந்த இந்திய ராணுவம் அங்கு பழங்குடியினா் புரட்சியை ஒடுக்கியது. அடுத்ததாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் முனைப்பில் ராணுவம் விரைந்தபோது தன்னிச்சையாக போா்நிறுத்த முடிவை மேற்கொண்டவா் நேரு. பிற சுதேச அரசுகளைப்போல் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தையும் வல்லபபாய் படேலிடம் நேரு ஒப்படைத்திருந்தால் பிஓகே என்ற ஒரு பகுதியே உருவாகி இருக்காது. தற்போது ஜம்மு-காஷ்மீா் மற்றும் இந்தியாவின் வரலாறு வேறாக இருந்திருக்கும்.
தற்போது வல்லபபாய் படேல் நினைவாக மேற்கொள்ளப்படும் இந்தப் பேரணியில் போதைப்பொருள் ஒழிப்பு, தூய்மை மற்றும் உள்நாட்டு பொருள்கள் ஊக்குவிப்பு ஆகியவை குறித்த விழிப்புணா்வை மக்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். தற்சாா்பு மற்றும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.