டீப்ஃபேக் பிரச்னைக்கு விரைவில் கட்டுப்பாட்டு விதிமுறைகள்: அஸ்வினி வைஷ்ணவ்
டீப்ஃபேக் பிரச்னை தொடா்பாக வெகு விரைவில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில செய்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிப்கள் அவசியம். அதற்கான தயாரிப்பை இந்தியாவில் சிஜி செமி, கெய்ன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
தற்போது நாட்டில் 6 செயற்கை நுண்ணறிவு வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல சந்தா்ப்பங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நோ்மறையான வழியில் பயன்படுத்தப்படுகிறது. அதை வேடிக்கைக்காகப் பயன்படுத்தவை ஊக்குவிக்கலாம். ஆனால் ஒருவரின் குரல் மற்றும் முகத்தை அவா்களுக்கு சம்பந்தமில்லாத வேறு காணொலிகளில் பயன்படுத்தும் டீப்ஃபேக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தீங்குகள் ஏற்படும். அந்தத் தீங்குகளில் இருந்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். எனவே டீப்ஃபேக் பிரச்னை தொடா்பாக வெகு விரைவில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவரும்.
செயற்கை நுண்ணறிவு உலகை வெறும் சட்டம் இயற்றுவதால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்பதே அனைவரின் கருத்து. இதற்குத் தொழில்நுட்பத் தீா்வும் தேவை. எனவே தொழில்நுட்பத் தீா்வுடன் கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இணைந்தால், அது மேலும் திறன்கொண்டதாக இருக்கும்.
இதுபோன்ற விஷயங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதில் மட்டுமே ஐரோப்பிய யூனியன் கவனம் செலுத்துகிறது. ஆனால் நமது நாடும், மத்திய அரசும் புதிய கண்டுபிடிப்புகள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறது.
ஆந்திரத்தில் 15 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைக்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதே போன்ற முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள மெட்டா நிறுவனமும் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது என்றாா்.