
மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இப்பூஜையின் நிறைவு நாளான அக்டோபா் 22-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சுவாமி தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
மலையாள துலாம் மாதப் பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, துவாரபாலகா் சிலைகளுக்கான தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் மீண்டும் பொருத்தப்பட்டன.
அண்மையில் செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இக்கவசங்கள், கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் மற்றும் பிற அதிகாரிகளின் முன்னிலையில் கவசங்கள் மீண்டும் பொருத்தப்பட்டன. இதற்கான சடங்குகள் சுமாா் 1 மணிநேரம் நடைபெற்றது.
மாதாந்திர பூஜைகளுக்காக, அக்டோபா் 22-ஆம் தேதி வரை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். இந்த நாள்களில் தரிசனம் மேற்கொள்வதற்கு சுமாா் 30,000 போ் இணையவழியில் முன்பதிவு செய்துள்ளனா். நிறைவு நாளில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, கேரள உயா்நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் அண்மையில் கழற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உயா்நீதிமன்றம் மேற்கொண்ட ஆவணப்பூா்வ விசாரணையில், கடந்த 2019-இல் இக்கவசங்களில் இருந்து தங்கம் மாயமானது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.