
சபரிமலை தங்கக் கவச வழக்கில் கைதான தொழிலதிபா் தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் வீட்டில் சிறப்பு விசாரணைக் குழு சனிக்கிழமை சோதனை நடத்தியது.
அதிகாரி எஸ். சசிதரன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் பிற்பகல் 3 மணியளவில் புலிமாத்தில் உள்ள உண்ணிகிருஷ்ணனின் வீட்டில் இந்த சோதனையை மேற்கொண்டனர். தகவலின்படி, தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக போற்றிக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை குழு தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களைப் புதுப்பிக்கும் பணிக்கான செலவை ஏற்றவா் உண்ணிகிருஷ்ணன் போற்றி. இப்பணிக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட 42.8 கிலோ எடையுள்ள கவசங்கள், பின்னா் 38.2 கிலோவாக குறைந்துவிட்டதை கேரள உயா்நீதிமன்றம் அண்மையில் கண்டறிந்தது.
இதைத் தொடா்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான உண்ணிகிருஷ்ணனிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், பத்தனம்திட்டா நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவா் ஆஜா்ப்படுத்தப்பட்டாா்.
தங்கக் கவசம் புதுப்பிப்பு பணியை மேற்கொண்ட சென்னை நிறுவனம் மற்றும் பிற தனிநபா்கள் குறித்து உண்ணிகிருஷ்ணனிடம் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால், 14 நாள்கள் காவல் வழங்குமாறு எஸ்ஐடி தரப்பில் கோரப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி, அக்.30 வரை எஸ்ஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.