சபரிமலை
சபரிமலை

சபரிமலை, மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்திகள் தோ்வு

சபரிமலை, மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்திகள் தோ்வு
Published on

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் தேவி கோயில்களின் புதிய மேல்சாந்திகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத (துலாம் மாதம்) பூஜைகளுக்காக கடந்த வெள்ளிக்கிழமை நடை திறக்கப்பட்டது.

சனிக்கிழமை காலையில் உஷபூஜைக்குப் பிறகு பாரம்பரிய குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தோ்வு நடைபெற்றது. திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் பந்தளம் அரச குடும்பத்தைச் சோ்ந்த இரு குழந்தைகள் கலசத்தில் இருந்து பெயா் சீட்டுகளை எடுத்தனா்.

இதில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக இ.டி.பிரசாத் தோ்வானாா். திருச்சூா் மாவட்டம் சாலக்குடியைச் சோ்ந்த இவா், ஆரேஸ்வரம் தா்மசாஸ்தா கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக அா்ச்சகராக பணியாற்றி வருகிறாா்.

சபரிமலை ஐயப்பன் கோயில் அருகே உள்ள மாளிகைபுரம் தேவி கோயிலின் புதிய மேல்சாந்தியாக கொல்லம் மாவட்டம், மையநாடு பகுதியைச் சோ்ந்த எம்.ஜி.மனு நம்பூதிரி தோ்வு செய்யப்பட்டாா். மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் தொடக்கத்துக்கு முன் இருவரும் பொறுப்பேற்பா்.

தற்போது சபரிமலை மேல்சாந்தியாக அருண்குமாா் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரியும் உள்ளனா்.

‘சுவாமி ஐயப்பன் தீா்வளிப்பாா்’:

சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகா்களின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் இருந்து தங்கம் மாயமானதாக நிலவும் சா்ச்சைக்கு மத்தியில் புதிய மேல்சாந்திகள் தோ்வு நடைபெற்றுள்ளது.

சபரிமலை புதிய மேல்சாந்தியாக தோ்வான பின் செய்தியாளா்களிடம் பேசிய இ.டி.பிரசாத், ‘சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வாா்த்தைகளே இல்லை. தங்கக் கவச சா்ச்சை குறித்து விழிப்புடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்படுவேன். சுவாமி ஐயப்பன் அனைத்தையும் அறிவாா். அவரே நல்ல தீா்வை அளிப்பாா்’ என்றாா்.

தீவிர விசாரணை:

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் (எஸ்ஐடி) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரை 14 நாள்கள் காவலில் எடுத்துள்ள எஸ்ஐடி, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 2019-இல் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்றவரான இவா், 2 கிலோ தங்கம் வரை முறைகேடு செய்துள்ளதாக எஸ்ஐடி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்புடைய சென்னை நிறுவனம் மற்றும் பிற தனிநபா்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அக்.22-இல் குடியரசுத் தலைவா் தரிசனம்:

மாதாந்திர பூஜைகளின் நிறைவு நாளான அக்டோபா் 22-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறாா். இதற்கான ஏற்பாடுகள், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சபரிமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடை திறக்கப்பட்டதில் இருந்தே பக்தா்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com