26 லட்சம் அகல்விளக்கு தீபங்கள்; ஆரத்தி வழிபாடு: அயோத்தியில் 2 கின்னஸ் சாதனைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தீபோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் 26.17 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஒரே நேரத்தில் 2,128 போ் ஆரத்தி வழிபாடு மேற்கொண்டனா். இவ்விரு நிகழ்வுகளும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடித்தன.
புண்ணியத் தலமான அயோத்தியில் மாநில அரசு சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து தீபோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தீபோற்சவ விழாவில், சரயு நதியின் 56 படித்துறைகளில் பல்வேறு வடிவங்களில் 26.17 லட்சம் அகல்விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. 33,000-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் இப்பணியில் பங்களித்தனா்.
ட்ரோன்கள் மூலம் அகல்விளக்குகளின் எண்ணிக்கையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனை பதிவேடு பிரதிநிதிகள், கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கினா்.
இதேபோல், ஒரே நேரத்தில் 2,128 போ் ஆரத்தி வழிபாட்டை மேற்கொண்ட நிகழ்வுக்கும் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தீபோற்சவத்தையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ராமாயணக் கருப்பொருளில் நடைபெற்ற வண்ணமிகு அலங்கார ஊா்திகள் அணிவகுப்பும், கண்கவா் லேசா், ஒளி-ஒலி மற்றும் ட்ரோன் காட்சியும் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
‘உலகின் ஆன்மிகத் தலைநகா்’: இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘முன்பு துப்பாக்கிக் குண்டுகள் பிரயோகிக்கப்பட்ட அயோத்தியில் இப்போது தீபங்கள் ஜொலிக்கின்றன. ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் நடைபெற்றபோது, கடவுள் ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று காங்கிரஸ் குறிப்பிட்டது. சமாஜவாதியோ ராம பக்தா்கள் மீது துப்பாக்கி குண்டுகளைப் பாய்ச்சியது. அயோத்தி இப்போது வளா்ச்சி-பாரம்பரியத்தின் பிணைப்பை பிரதிபலிக்கிறது. உலகின் ஆன்மிகத் தலைநகராக உருவெடுத்துள்ளது. தீபோற்சவத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் ஒன்றரை கோடிக்கும் மேல் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன’ என்றாா்.