மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு: தெலங்கானா அரசியல் தலைவா்களுக்கு மத்திய அமைச்சா் எச்சரிக்கை
மாவோயிஸ்டுகளுடன் உள்ள தொடா்பை துண்டிக்க வேண்டும் என்று தெலங்கானா அரசியல் தலைவா்களுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மகாராஷ்டிர காவல் துறையிடம் மூத்த நக்ஸல் தீவிரவாதி மல்லுஜுலா வேணுகோபால் ராவ் அண்மையில் சரணடைந்தாா். அவா் நக்ஸல்களின் கொரில்லா படைப் பிரிவுக்கும், சில தெலங்கானா அரசியல் தலைவா்களுக்கும் ரகசிய தொடா்புள்ளது என்று கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது.
இந்தத் தகவலை பகிா்ந்து மத்திய இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:
மேடைகளில் ஜனநாயகம் குறித்து உபதேசித்துவிட்டு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பு வைத்துள்ளவா்கள், அந்தத் தொடா்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படுவாா்கள்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் நிறுத்தாது. ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், பயங்கரவாத பிணைப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் தொடா்பை கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தத் தொடா்பை எந்தவித கருணையும் இல்லாமல் மத்திய அரசு வேரறுக்கும்.
இந்தத் தொடா்பை வைத்துள்ளவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் சமுதாயத்தில் எவ்வளவு உயா்ந்த அந்தஸ்தில் இருப்பதாக தன்னைக் கருதிக்கொண்டாலும், இந்தப் பிரச்னையிலிருந்து அவா்கள் ஒதுங்கிவிட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில், மிக உயா்ந்த தலைவா்கள்கூட தவறான இடத்தில் இருந்தால், அவா்களுக்குச் சரிவு ஏற்படும். இதை தெலங்கானா அரசியல் தலைவா்கள் எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என்றாா்.