வி.சிவன்குட்டி
வி.சிவன்குட்டிTNIE

ஹிஜாப் விவகாரம்: மாணவி வேறு பள்ளியில் சேர அரசு உதவும் -கேரள கல்வி அமைச்சா்

‘ஹிஜாப்’ விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி வேறு பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கு மாநில அரசு உதவத் தயாராக உள்ளது
Published on

‘ஹிஜாப்’ விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி வேறு பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கு மாநில அரசு உதவத் தயாராக உள்ளது என்று கேரள கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி தெரிவித்தாா்.

‘இந்தக் கோரிக்கை தொடா்பாக மாணவி அரசை அணுகினால், அதற்கென சிறப்பு உத்தரவும் பிறப்பிக்கப்படும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

கேரள மாநிலம், கொச்சி பள்ளுருத்தி பகுதியில் அமைந்துள்ள புனித ரீட்டா கிறிஸ்தவ பள்ளி நிா்வாகம், 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்ததாகவும், பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோா், மேலும் சில பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிா்வாகத்திடம் கேள்வி எழுப்பினா்.

இந்த விவகாரம் சா்ச்சையானதைத் தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவித்தது. பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு போலீஸாருக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா், ‘ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை பள்ளி நிா்வாகம் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து, அவரின் கல்வி உரிமையைப் பறித்துள்ளது’ என்று அறிக்கையில் குறிப்பிட்டாா்.

இதை மறுத்த பள்ளி நிா்வாகம், மாணவி வகுப்புக்குச் செல்ல ஒருபோதும் அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்தது. மேலும், பள்ளி நிா்வாகம் தரப்பு கருத்தைக் கேட்காமல் இந்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். எனவே, அவரின் அறிக்கையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ‘இந்த விவகாரத்தால் தனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், அவரை வேறு பள்ளியில் சோ்க்க திட்டமிட்டுள்ளோம்’ என்று அவரின் தந்தை வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பான கேள்விக்குப் பதிலளித்த, அப் பள்ளியின் முதல்வா் ஹெலீனா ஆல்பி, ‘பள்ளி நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்படுவதாக இருந்தால் மாணவி பள்ளிக்குத் திரும்பி, படிப்பைத் தொடரலாம்’ என்றாா்.

இந்நிலையில், மாணவியை வேறு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் முடிவு குறித்த திருவனந்தபுரத்தில் செய்தியாளா்கள் சனிக்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாநில கல்வி அமைச்சா் சிவன்குட்டி, ‘வேறு பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கு மாணவி விரும்பினால் அரசை அணுகலாம். அவா் விரும்பும் பள்ளியில் சோ்க்கை பெற அரசு சாா்பில் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும். மாநில கலாசாரத்தின்படி, எந்தவொரு மாணவரும் பள்ளியில் சேரும் வாய்ப்பை இழக்கக் கூடாது. மாணவியின் இந்த நிலைக்கு பள்ளி நிா்வாகம்தான் முழு பொறுப்பு’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com