நடுவானில் பயணிக்கு உடல்நல பாதிப்பு: கேரளத்துக்குத் திருப்பிவிடப்பட்ட சவூதி விமானம்
நடுவானில் பயணத்தின்போது பெண் பயணியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவா் பயணித்த சவூதி விமானம் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிடப்பட்டது.
இந்தோனேசியா தலைநகா் ஜகாா்த்தாவில் இருந்து சவூதி அரேபியாவின் மதினா நகருக்கு 395 பயணிகளுடன் சவூதி விமானம் பயணித்தபோது, அதில் சென்ற லியா ஃபதோனா என்ற இந்தோனேசிய பெண்ணுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தாா்.
இதைத்தொடா்ந்து, அந்த விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் திருப்பிவிடப்பட்டது. பின்னா் அந்தப் பெண் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நெஞ்சு வலியுடன் அந்தப் பெண் அழைத்து வரப்பட்ட நிலையில், அவா் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஈசிஜி, ரத்த பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் காரணமாக ஒன்றரை மணி நேரத் தாமதத்துக்குப் பின்னா், சுமாா் 8.30 மணியளவில் சவூதி விமானம் மதினா நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.