பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்
பஞ்சாபைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் அரிய காணொலிப் பதிவை பிரிட்டன் காவல் துறையிடம் இருந்து மாநில அரசு பெறுவதற்கு சட்ட ரீதியில் உதவ வேண்டும் என்று அந்நாட்டைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் குழுவிடம் முதல்வா் பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்தாா்.
பஞ்சாப் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள பிரிட்டன் மற்றும் வேல்ஸ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினா், சண்டீகரில் முதல்வா் பகவந்த் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினா்.
அவா்களுடன் கலந்துரையாடிய முதல்வா், ‘தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் காணொலிப் பதிவுகள் எதுவும் இந்தியாவில் இல்லை. அதேநேரம், பிரிட்டிஷ் ஆட்சியில் அவா் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொலிப் பதிவு பிரிட்டன் காவல் துறையினா் வசம் உள்ளதாக அறிகிறோம். அந்த காணொலிப் பதிவைப் பெற மாநில அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில், மாநில அரசுக்கு பிரிட்டன் வழக்குரைஞா்கள் சட்ட ரீதியில் உதவ வேண்டும். பகத் சிங்கின் காணொலிப் பதிவு, பஞ்சாபிகள் உள்பட இந்தியா்கள் அனைவருக்கும் உத்வேகமளிப்பதாக இருக்கும்’ என்றாா்.