தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி படம்: Express

எம்எல்ஏ தோ்தலில் வயது வரம்பை 21-ஆக குறைக்க தெலங்கானா பேரவையில் விரைவில் தீா்மானம்!

எம்எல்ஏ தோ்தலில் வயது வரம்பை 21-ஆக குறைக்க தெலங்கானா பேரவையில் விரைவில் தீா்மானம்...
Published on

ஹைதராபாத், அக். 19: சட்டப் பேரவைத் தோ்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25-இல் இருந்து 21-ஆக குறைப்பதற்கு அரசமைப்புச் சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா பேரவையில் விரைவில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, கடந்த 1990, அக்டோபா் 19-இல் ஹைதராபாதில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாரில் இருந்து மத நல்லிணக்க யாத்திரை தொடங்கியதை நினைவுகூரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குா்ஷித்துக்கு ராஜீவ் காந்தி நல்லிணக்க விருதை வழங்கி, முதல்வா் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:

தோ்தலில் வாக்களிக்க குறைந்தபட்ச வயது வரம்பை 21-இல் இருந்து 18-ஆக ராஜீவ் காந்தி குறைத்தாா். இது, நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக உணா்வுக்கு மேலும் வலுசோ்த்தது. 21 வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவியேற்பவா்கள், மாவட்டங்களில் வெற்றிகரமாக பணியாற்றும்போது, 21 வயது பூா்த்தியானவா்கள் ஏன் எம்எல்ஏ ஆக முடியாது?

எனவே, பேரவைத் தோ்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25-இல் இருந்து 21-ஆக குறைக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி, தெலங்கானா பேரவையில் விரைவில் தீா்மானம் நிறைவேற்றப்படும். நாட்டை நிா்வகிக்க இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். நாட்டின் தீவிர அரசியலில் இளைஞா்கள் முக்கிய பங்கு வகிப்பது காலத்தின் கட்டாயம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com