
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்று (அக். 20) அறிவித்தது.
இதில், வைஷாலி மாவட்டத்திற்குட்பட்ட ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடவுள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக நவ.6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கும், நவ.11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நவ.14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.17 கடைசி நாளாகும். வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று (அக். 20) கடைசி நாளாகும்.
இதேபோன்று, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யவும் இன்று கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை அக். 21 இல் நடைபெறும். அக். 23 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்.
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், 143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி இதுவரை 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்ஸிய லெனினிஸ்ட் இந்திய கம்யூனிச கட்சி (சிபிஐ - எம்.எல்.) ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | பனீர் என்பது பனீர் மட்டுமல்ல! யூரியா, சோப்புத்தூள், செயற்கை ரசாயனமாக இருக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.