
பிகார் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) இன்று(அக். 20) அறிவித்துள்ளது.
பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்துவிட்டது. 2-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் (அக். 20) முடிவடைந்தது.
பிகார் தேர்தலில் மகாகாத்பந்தன் பெயரில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், ராஷ்திரீய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) உள்ளடக்கிய பிகாரின் முக்கிய எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் சுமூக முடிவை எட்டவில்லை. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (அக். 20) முடிவடைந்த நிலையில், 143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்று (அக். 20) அறிவித்தது. காங்கிரஸ் கட்சி இதுவரை 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில், பல தொகுதிகளில், ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி - காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரெதிராக ஒருவரையொருவர் எதிர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கூட்டணிக்கு ஆதரவு இனி அளிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள ஜார்க்கண்ட் அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சுதிவ்யா குமார் செய்தியாளர்களுடன் இன்று(அக். 20) பேசுகையில் தெரிவித்தார். தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸும் ராஷ்திரீய ஜனதா தளமும் தங்களை நிராகரித்துவிட்டதாக ஜேஎம்எம் விமர்சித்துள்ளது.
அவர் பேசியதாவது, “‘அரசியல் தந்திரம்’ என்ற சொல்லாடலை நான் பயன்படுத்துகிறேன். அதற்கான காரணம், பாட்னாவுக்கு நான் அக். 7-இல் சென்றிருந்தேன். எமது கட்சிப் பிரதிநிதியாக அங்கு சென்றிருந்தபோது, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையானது சுமூகமாக நடைபெற்றது.
இந்த நிலையில், பிகார் அரசியலில் ஜேஎம்எம் பங்கேற்பதை இண்டியா கூட்டணி நிராகரிக்க முயற்சிக்கும் போல் தெரியவில்லை. நாங்கள் வருவதை விரும்பவில்லை என்று விரும்பினால், எங்களிடம் முன்னதாகவே தெரியப்படுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை.
அக். 7 முதல் 20 வரை எங்களுக்கு ‘ஆம்’ என்றோ அல்லது ‘இல்லை’ என்றோ அவர்கள் தெளிவான பதிலை அளிக்கவில்லை. ஆர் ஜேடி ‘அரசியல் தந்திரத்தில் ஈடுபடுகிறது. இது அரசியலில் ஏற்புடையதல்ல” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.