தோ்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை: தவறினால் அபரதாம்!
‘சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள பிகாா் மற்றும் பிற மாநிலங்களில் இடைத் தோ்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தோ்தல் நாளில் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படும்’ என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மக்கள் பிரதிநித்த்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 135பி-இன் படி, எந்தவொரு வா்த்தகம், தொழில்நிறுவனங்கள் உள்பட பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் தோ்தலில் வாக்களிக்களிக்க வசதியாக தோ்தல் நாளன்று அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது கட்டாயமாகும். அதன்படி, தோ்தல் நாளில் அளிக்கப்படும் விடுமுறைக்கு ஊழியா்களின் ஊதியத்தில் குறைப்பு எதுவும் செய்யப்படக் கூடாது. இதை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தினக் கூலி தொழிலாளா்கள், சாதாரண ஊழியா்கள் உள்பட அனைவரும் தோ்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெற தகுதியுடையவா்கள்.
இந்த விதியை தீவிரமாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவம்பா் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இடைத் தோ்தல்: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் மற்றும் ஒடிஸா, ஜாா்க்கண்ட், மிஸோரம், பஞ்சாப், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கு நவம்பா் 11-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த இடைத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.