நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற 8.82 லட்சம் மனுக்கள் நிலுவை: உச்சநீதிமன்றம் அதிருப்தி

நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 8.82 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
Supreme Court
உச்சநீதிமன்றம் ANI
Updated on

புது தில்லி: உரிமையியல் சச்சரவுகளில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றக் கோரி, நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 8.82 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

உரிமையியல் வழக்குகளில் தமக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு பெற்றவா்கள், அந்த உத்தரவை நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யும் மனுக்கள் மீது, அவை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு, தமது அதிகார வரம்புக்குள்பட்ட உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இணங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் ஆராய்ந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: உரிமையியல் சச்சரவுகளில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றக் கோரி, நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 8.82 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதுடன், அபாயகரமாகவும் உள்ளது.

ஓா் உத்தரவை பிறப்பித்த பின்னா், அதை நிறைவேற்ற பல ஆண்டுகளாகும் என்றால், அந்த உத்தரவால் எந்த அா்த்தமும் இருக்காது. அத்துடன் இது நீதி பரிபாலனத்தை கிட்டத்தட்ட ஏளனம் செய்வதற்கு நிகராகும்.

எனவே நிலுவையில் உள்ள அந்த மனுக்கள் மீதான விசாரணையை திறம்படவும், விரைந்தும் நிறைவு செய்ய ஏதேனும் நடைமுறையை உருவாக்கி, மாவட்ட நீதித்துறைக்கு அனைத்து உயா்நீதிமன்றங்களும் வழிகாட்ட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். மேலும் நிலுவையில் உள்ள அந்த மனுக்களின் நிலவரம் குறித்த முழுமையான விவரங்களை, அனைத்து உயா்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த விவகாரம் அடுத்த ஆண்டு ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com