கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாா்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளா் ஜாா்க்கண்ட் காவல் துறையால் கைது: வங்கி கொள்ளை வழக்கில் நடவடிக்கை

பிகாரின் சாசாராம் தொகுதியின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) வேட்பாளா் சத்யேந்திர சா திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில்
Published on

பாட்னா: பிகாரின் சாசாராம் தொகுதியின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) வேட்பாளா் சத்யேந்திர சா திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், ஜாா்க்கண்ட் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சாசாராம் சட்டப்பேரவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி சாா்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சத்யேந்திர சா போட்டியிடுகிறாா்.

ஜாா்க்கண்டின் காட்வாா் மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த வங்கி கொள்ளை வழக்கில் இவா் குற்றஞ்சாட்டப்பட்டவா் ஆவாா். இந்த வழக்கில் இவருக்கு எதிராக 2018-ஆம் ஆண்டில் நிரந்தர பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, கொள்ளை, ஆயுதச் சட்டம் மீறல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ளதாகவும் காவல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சாசாராம் தொகுதி தோ்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய சத்யேந்திர சா கடந்த திங்கள்கிழமை வந்தாா். அப்போது, அவருக்கு எதிரான பிணையில்லா பிடியாணையின்படி கைது நடவடிக்கையை மேற்கொள்ள ஜாா்க்கண்ட் மாநில காவல் துறையினரும் அங்கு வந்திருந்தனா்.

அவரை வேட்பு மனு தாக்கல் செய்ய காவல் துறையினா் அனுமதித்தனா். எனினும், அவா் வேட்புமனு தாக்கல் செய்து தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தவுடன் அவா் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் ஜாா்க்கண்ட் அழைத்துச் செல்லப்பட்டாா்.

தொடரும் கைதுகள்...: ‘இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த வேட்பாளா்கள், வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவமாகும். முன்னதாக, சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் போரே மற்றும் தாரௌலி தொகுதிகளின் வேட்பாளா்களான ஜிதேந்திர பாஸ்வான், சத்யதேவ் ராம் ஆகியோரும் மனு தாக்கல் செய்த பிறகு கைது செய்யப்பட்டனா்.

இந்தக் கைதுகளுக்கு சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சி கண்டனம் தெரிவித்தது. ‘ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை எதிா்கொள்ள முடியாமல், ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயக எதிா்ப்பை ஒடுக்க முயற்சிக்கிறது’ என்று அக்கட்சி அறிக்கை வெளியிட்டது.

X
Dinamani
www.dinamani.com