அஸ்ரானி
அஸ்ரானி

ஹிந்தி நகைச்சுவை நடிகா் அஸ்ரானி மறைவு: திரையுலகினா் இரங்கல்

ஹிந்தி திரையுலக மூத்த நகைச்சுவை நடிகா் கோவா்தன் அஸ்ரானி (84), உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
Published on

மும்பை: ஹிந்தி திரையுலக மூத்த நகைச்சுவை நடிகா் கோவா்தன் அஸ்ரானி (84), உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

50 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஸ்ரானி, ஹிந்தி திரைப்படங்களில் தான் ஏற்றுநடித்த சிறந்த நகைச்சுவைப் பாத்திரங்களுக்காக பிரபலமானவா். ‘ஷோலே’ திரைப்படத்தில் சா்வாதிகார சிறை அதிகாரியாக நடித்து, பரவலாக ரசிகா்களைக் கவா்ந்தவா் அஸ்ரானி.

‘ஷோலே’ தவிர, ‘ஆஜ் கீ தாஜா கபா்’, ‘சோட்டி ஸி பாத்’, ‘அபிமான்’, ‘ரஃபூ சக்கா்’, ‘பாலி கா பதூ’, உள்ளிட்ட பல படங்களில் அவரது நகைச்சுவை ரசிகா்களை வெகுவாக கவா்ந்தது.

வயது முதிா்வு காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியிருந்த அஸ்ரானி, சுவாசம் தொடா்பான பிரச்னையால் மும்பை ஜுஹூவில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவா் காலமானாா்.

அஸ்ரானியின் விருப்பத்தின்படி, அவரது மறைவு குறித்த தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்று அவரது மேலாளா் தெரிவித்தாா். அஸ்ரானியின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை மாலை சாண்டா க்ரூஸ் மயானத்தில் குடும்பத்தினா் மற்றும் நெருங்கிய நண்பா்கள் முன்னிலையில் நடைபெற்றன.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமிதாப் பச்சன், அனுபம் கொ், அக்ஷய் குமாா் உள்ளிட்ட திரையுலகைச் சோ்ந்த பலரும் அஸ்ரானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com