இந்தியா அநீதியைப் பழிவாங்கியுள்ளது! மக்களுக்கு மோடி கடிதம்

தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்...
மக்களுக்கு மோடி கடிதம்
மக்களுக்கு மோடி கடிதம்
Published on
Updated on
2 min read

மூன்றாவது பொருளாதாரமாக முன்னேறும் பாதையில் இந்தியா பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தெரிவித்திருப்பதாவது:

“தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு கொண்டாடப்படும் இரண்டாவது தீபாவளி இது. ஸ்ரீ ராமர் நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்துள்ளார், மேலும் அநீதியை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் தந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையே இதற்கான சிறந்த உதாரணம். சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியா நீதியை மட்டும் நிலைநிறுத்தவில்லை, அநீதியைப் பழிவாங்கியது.

சிறந்த தீபாவளி

குறிப்பாக இந்தாண்டு தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், முதல் முறையாக, நாடு முழுவதும் உள்ள தொலைதூரப் பகுதிகளில் நக்ஸல் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தின் வேரிலிருந்து ஒழிக்கப்பட்ட பல மாவட்டங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டது.

சமீப காலங்களில், நக்ஸல்கள், மாவோயிஸ்ட்டுகள் பலர் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து, நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி சரணடைந்துள்ளனர். இது நாட்டிற்கு ஒரு பெரிய சாதனை.

இந்த வரலாற்று சாதனைகளுக்கு மத்தியில், சமீபத்தில் நமது நாடு அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளில், ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்தன. இதன்மூலம் விழா காலங்களில் குடிமக்கள் பல்லாயிரம் கோடிகளை சேமித்து வருகின்றனர்.

மூன்றாவது பொருளாதாரம்

பல நெருக்கடிகளைச் சந்திக்கும் உலகில், இந்தியா நிலைத்தன்மை மற்றும் உணர்திறன் ஆகிய இரண்டிற்கும் அடையாளமாக உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம்.

வளர்ந்த இந்தியா மற்றும் சுயசார்பு கொண்ட இந்தியா என்ற பயணத்தில் குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, நாட்டிற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

உள்ளூர் தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து யோகாவை ஏற்றுக்கொள்வோம். இந்த முயற்சிகள் அனைத்தும் "வளர்ந்த பாரதம்" நோக்கி நம்மை விரைவாக நகர்த்தும்.

ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றும்போது, ​​அதன் ஒளி குறையாது, மாறாக அது மேலும் வளரும் என்ற பாடத்தை தீபாவளி நமக்குக் கற்பிக்கிறது. அதே மனப்பான்மையுடன், இந்த தீபாவளியன்று நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நேர்மறைத் தீபங்களை ஏற்றுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

India on track to become the third largest economy! Modi's letter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com