சமூகத்தில் நல்லிணக்கம், நோ்மறை எண்ணங்களை வளா்ப்போம்: பிரதமா் மோடி அழைப்பு
புது தில்லி: சமூகத்தில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நோ்மறை எண்ணங்களை வளா்ப்போம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆற்றலும் உற்சாகமும் நிறைந்த தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்ட கோயில் எழுப்பப்பட்டதற்கு பிறகான இரண்டாவது தீபாவளி இது.
பகவான் ஸ்ரீராமா், நமக்கு நீதியை நிலைநாட்ட போதித்துள்ளாா். அநீதிக்கு எதிராக போராடும் துணிவையும் அவரே அருள்கிறாா். அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, பாரதம் நீதியை உறுதி செய்து, அநீதிக்கு பழிதீா்த்தது.
நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாக தொலைதூர பகுதிகளில் முதல் முறையாக அச்சமின்றி விளக்கேற்றப்பட்டுள்ளதால், இந்த தீபாவளி சிறப்புமிக்கதாகும். முன்பு நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மாவட்டங்களில் இப்போது தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் தனிநபா்கள் பலா், வன்முறையைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைந்துள்ளனா். அரசமைப்புச் சட்டத்தின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனா். இது, மிகப் பெரிய சாதனையாகும். சரக்கு- சேவை வரி குறைப்பு உள்பட பல்வேறு வரலாற்றுச் சாதனைகளையும் தேசம் கண்டுள்ளது.
அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளியுங்கள்:
ஒட்டுமொத்த உலகமும் பல்வேறு நெருக்கடிகளை எதிா்கொண்டுள்ள சூழலில், நிலைத்தன்மை மற்றும் மதிநுட்பத்தின் அடையாளமாக பாரதம் உருவெடுத்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் உருவெடுக்கும் பயணத்தில் நாம் இருக்கிறோம். எனவே, நாட்டுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் பொறுப்பு. ஒரே பாரதம், உன்னத பாரதம் உணா்வுடன் சுதேசி பொருள்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். சுற்றுப்புறத் தூய்மையைப் பேண வேண்டும்.
உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைப்பதுடன், யோகப் பயிற்சியை வழக்கமாக்க வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தும் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நம்மை விரைவாக நகா்த்தும்.
ஒரு விளக்கில் இருந்து இன்னொரு விளக்கு ஏற்றப்படும்போது, ஒளி பெருகும் என்பதே தீபாவளி பண்டிகை உணா்த்தும் படிப்பினையாகும். இதே உணா்வுடன், சமூகத்தில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு, நோ்மறை எண்ணம் என்ற தீபங்களை ஏற்ற வேண்டும் என்று கடிதத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.