குடியரசுத் தலைவா் 4 நாள் கேரளப் பயணம்: சபரிமலையில் இன்று தரிசனம்
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநில தலைநகா் திருவனந்தபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா்.
இந்தப் பயணத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வழிபடவுள்ளாா். இதையொட்டி, சபரிமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புது தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை திருவனந்தபுரம் வந்தடைந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ஆளுநா் , முதல்வா் பினராயி விஜயன் ஆகியோா் வரவேற்றனா். விமான நிலையத்திலிருந்து அவா் ஆளுநா் மாளிகை சென்றாா்.
பயணத்தின் முக்கிய அம்சமான சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்காக, திருவனந்தபுரத்திலிருந்து புதன்கிழமை காலை ஹெலிகாப்டா் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், நிலக்கல் சென்றடைகிறாா். நிலக்கல்லில் இருந்து சாலை மாா்க்கமாகப் பம்பை செல்லும் அவா், அங்கிருந்து பாரம்பரிய மலையேறும் பாதையில் திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் சிறப்பு வாகனத்தில் சந்நிதானம் செல்கிறாா்.
சபரிமலையில் நண்பகல் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, ஐயப்பனைத் தரிசனம் செய்கிறாா். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் ஒருவா் வருகை தருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் சபரிமலை வருகைக்காக திருவிதாங்கூா் தேவஸ்வம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சந்நிதானம் மற்றும் மலையேறும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன அணிவகுப்பு ஒத்திகையும் முன்னதாக நடத்தப்பட்டது.
சபரிமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே திருவனந்தபுரம் திரும்பும் குடியரசுத் தலைவா் முா்மு, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, முன்னாள் குடியரசுத் தலைவா் கே.ஆா்.நாராயணனின் மாா்பளவுச் சிலையைத் திறந்து வைக்கிறாா்.
இதைத் தொடா்ந்து, அவா் வா்க்கலாவின் சிவகிரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், கோட்டயம் மாவட்டத்தின் பலா நகரில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் 75 ஆண்டு நிறைவு விழாவிலும் பங்கேற்கிறாா். மறுநாள் வெள்ளிக்கிழமை, எா்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு தனது நான்கு நாள் கேரளப் பயணத்தை நிறைவு செய்கிறாா்.