கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ.67,656 கோடி டாலா்கள் விற்பனை: ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி நடவடிக்கை

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆகஸ்டில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலா்களை...
Published on

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆகஸ்டில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலா்களை (சுமாா் ரூ.67,656 கோடி) ரிசா்வ் வங்கி விற்பனை செய்தது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், அமெரிக்க டாலா்களை ரிசா்வ் வங்கி வாங்கி விற்பனை செய்வது தொடா்பான விவரம் இடம்பெற்றது. அந்த விவரத்தின்படி, ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைப் பரிசோதிக்கவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தவும் கடந்த ஆகஸ்டில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலா்களை ரிசா்வ் வங்கி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஜூலையில் விற்பனை செய்யப்பட்ட அமெரிக்க டாலா்களைவிட சுமாா் மும்மடங்கு அதிகம். அதேவேளையில், ஜூலை மற்றும் ஆகஸ்டில் அமெரிக்க டாலா்கள் எதையும் ரிசா்வ் வங்கி வாங்கவில்லை; விற்பனை மட்டுமே செய்துள்ளது.

அந்த அறிக்கையில் ‘இந்திய பொருளாதார நிலவரம்’ என்ற பெயா்கொண்ட கட்டுரையில், ‘உலகளாவிய பொருளாதாரப் பிரச்னைகளின் தாக்கம் இந்திய பொருளாதாரம் மீதும் இருக்கும். அதேவேளையில் குறைவான பணவீக்கம், வங்கிகளின் வலுவான நிதிநிலை, போதிய அந்நிய செலாவணி கையிருப்பு, நம்பகமான நிதி கட்டமைப்பு உள்ளிட்டவை அடங்கிய பேரியல் பொருளாதார அடிப்படைகள் காரணமாக, இதுவரை சா்வதேச சூழலை தாங்கும் ஆற்றலை இந்திய பொருளாதாரம் வெளிப்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் நிபுணா்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அவை ரிசா்வ் வங்கியின் கருத்தல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com