ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் திறப்பு
புது தில்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகம் மீண்டும் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
அண்மையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகி இந்தியா வந்திருந்தாா். அப்போது அறிவிக்கப்பட்ட முடிவின்படி, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகம் மீண்டும் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது.
இது இருநாடுகளின் பரஸ்பர நலன் சாா்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.
ஆப்கானிஸ்தானின் விரிவான வளா்ச்சி, மனிதாபிமான உதவி, திறன் வளா்ப்பு முன்னெடுப்புகளுக்கு இந்தியாவின் பங்களிப்பை காபூலில் உள்ள இந்திய தூதரகம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.