
பாட்னா: பாஜகவை வீழ்த்தாமல் ஓயமாட்டோம் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக். 20) முடிவடைந்தது.
இத்தேர்தலில் அரசியல் ஆலோசனையாளராக இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் தான் நிறுவியுள்ள புதியதொரு அரசியல் கட்சியான ஜன் சுராஜ் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதுடன், தான் வேட்பாளராகக் களமிறங்கப் பொவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
இன்று(அக். 21) செய்தியாளர்களுடன் பேசிய பிரசாந்த் கிஷோர், “ஜன் சுராஜ் வேட்பாளர்கள் சிலர் வற்புறுத்திக் கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை திரும்பபெறச் செய்திருக்கின்றனர்(யாரென்பதை வெளிப்படையாக அவர் குறிப்பிடவில்லை). நாங்கள் பயந்து போயிருக்கிறோம் என்றதொரு மாயையை பாஜக கட்டமைக்க துடிக்கிறது.
பிகாரில் பாஜகவை தோற்கடித்து; தேசிய ஜனநாயகக் கூட்டணியை வேரறுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பிகார் தேர்தல் குறித்து மிகுந்த அச்சத்தில் இருப்பவர் ஒருவர் யாரெனில், அது ‘பாஜகதான்’” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாகவே, தேர்தலில் யார் அல்லது எந்தக் கட்சி வென்றாலும் அரசமைக்கப் போவது என்னவோ பாஜகதான் என்ற பெயரை பாஜக பெற்றுள்ளது.
‘எங்களுக்கு வாக்கு செலுத்துங்கள். இல்லையேல், லாலுவின் மோசமான ஆட்சி அமைந்துவிடும்’ என்ற பிரசரத்தை இப்போது பாஜக பிகாரில் கையிலெடுத்துள்ளது. நவ. 14-இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். அப்போது உண்மை வெளியாகும்.
பிரசாந்த் கிஷோரும், என்னுடன் உள்ள ஜன் சுராஜ் கூட்டாளிகளும் எவரொருவரையும் பார்த்து பயம் கொண்டவர்கள் அல்ல. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வேண்டுமானாலும் அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் பாருங்கள்; அல்லது எத்தனை வேட்பாளர்களை முடியுமோ அத்தனை பேரை அவரவர் வீடுகளிலேயே சிறை வைத்துத்தான் பாருங்களேன்... நாங்கள் ஒன்றும் மகாகாத்பந்தன் அல்ல; தேர்தலில் எழுச்சியுடன் போட்டியிடுவோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.