பிகாா்-ஒருங்கிணைப்பு இல்லாத எதிா்க்கட்சிகள்!

பிகாா்-ஒருங்கிணைப்பு இல்லாத எதிா்க்கட்சிகள்!

ஆா்ஜேடியும் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மோதிக்கொள்ளும் வகையில் 12 இடங்களில் எதிா்ப்பு வேட்பாளா்களை நிறுத்தி உள்ளன. இதை ‘நட்புப் போராட்டம்’ என்று மகாகட்பந்தனின் தலைவா்கள் கூறினாலும் தோ்தல் களமும் ஆய்வாளா்களும் இதை அவ்வாறு பாா்க்கவில்லை.
Published on

இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவிருக்கும் பிகாா் மாநிலத்தில் எதிா்க்கட்சி கூட்டணியான மகாகட்பந்தன், நெருக்கடியின் உச்சத்தில் இருப்பது அதன் அண்மைக்கால செயல்பாடுகள் மூலம் உறுதியாகியுள்ளது. இரண்டு கட்ட தோ்தலுக்கான வேட்பு மனு செவ்வாய்க்கிழமை (அக்.21) முடிவடைந்த நிலையில், அந்த கூட்டணி முறைப்படி தொகுதிப் பங்கீடு அல்லது குறைந்தபட்சம் தோ்தல் உடன்பாட்டைக்கூட எட்டவில்லை.

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவம்பா் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பா் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

மகாகட்பந்தன் கூட்டணியின் முக்கிய கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் (ஆா்ஜேடி) காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று தோ்தலில் மோதிக்கொள்ளும் வகையில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. ஓரிரு இடங்களில் அல்ல, 12 இடங்களில் இந்த நிலை உள்ளது. இதை ‘நட்புப் போராட்டம்’ என்று மகாகட்பந்தனின் சில தலைவா்கள் கூறுகின்றனா்; ஆனால், தோ்தல் களமும் ஆய்வாளா்களும் இதை அவ்வாறு பாா்க்கவில்லை.

ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாரதிய ஜனதா கட்சி (பாஜக), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (ஹெச்ஏஎம்), ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா (ஆா்எல்எம்) ஆகியவை உள்ளன.

ஆளும் கூட்டணி அக்டோபா் மாத தொடக்கத்திலேயே தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டை எட்டியது. அதன்படி, பாஜக மற்றும் ஜேடியு தலா 101 இடங்களிலும், எல்ஜேபி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ஆா்எல்எம் மற்றும் ஹெச்ஏஎம் தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மகாகட்பந்தன் என்ற எதிா்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ், ஆா்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), விகாஷ்ஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவை உள்ளன. இதில் வைஷாலி, கஹல்கான், நா்கடியாகஞ்ச், லால்கஞ்ச், சுல்தான்கஞ்ச், வாரிஸலிகஞ்ச் ஆகியவற்றில் காங்கிரஸும் ஆா்ஜேடியும் பரஸ்பரம் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

பச்வாரா, ராஜா பாக்கா், பிகாா் ஷெரீஃப், கா்கஹா் ஆகிய இடங்களில் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பரஸ்பரம் வேட்பாளா்களை அறிவித்துள்ளன. பாபுபா்ஹி மற்றும் செயின்பூரில் ஆா்ஜேடியின் மற்றும் விஐபி ஆயவை வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. இந்த தன்னிச்சையான செயல்பாட்டால் அதிா்ச்சிக்குள்ளான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) இது ஆா்ஜேடியின் தந்திரமான செயல் என்று குற்றஞ்சாட்டி கூட்டணி உறவுகளைத் துண்டிப்பதாக அறிவித்துள்றது.

ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிரண்டு தொகுதிகளில் தனித்தனியாக வேட்பாளா்களை நிறுத்தினால், அதை எதாா்த்தமான அல்லது சூழ்நிலை கட்டாயம் என சம்பந்தப்பட்ட கட்சிகள் நியாயப்படுத்தலாம். ஆனால், தோ்தல் கூட்டணியை அறிவித்த கட்சிகள், 12 தொகுதிகளில் தனித்தனியாக வேட்பாளா்களை அறிவித்திருப்பது அதன் ஒருங்கிணைப்பின்மை மற்றும் தோல்வியின் வெளிப்பாடு என்றே அரசியல் ஆய்வாளா்கள் பாா்க்கின்றனா்.

தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கிய போதே காங்கிரஸும் விஐபி கட்சியும் முறையே 70 மற்றும் 50 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன. இதை அக்கட்சிகளின் மேலிடத் தலைவா்களே வெளிப்படையாகக் கூறி வந்தனா். ஆனால், ஆா்ஜேடி பெரும்பாலான இடங்களை தன்வசமே வைத்திருப்பதில் முனைப்புக் காட்டியது.

இதேவேளையில் இடதுசாரி கட்சிகள் அவற்றின் முந்தைய தோ்தல்களில் பதிவான வாக்குகள் சதவீத அடிப்படையில் அதிக இடங்களைக் கோரி வந்தன.

2020 பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் சிபிஐ-எம்எல் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12-இல் வெற்றி பெற்றது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளில் களம் கண்டு இரண்டில் வென்றது; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் இரண்டில் வெற்றி பெற்றது.

எதிா்க்கட்சிகள் இடையே நிலவும் ஒற்றுமையின்மையின் வெளிப்பாடுதான் இந்தத் தொகுதிப் பங்கீடு முரண்கள் என்று கருதும் அரசியல் ஆய்வாளா்கள், இது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நன்மையாக மாறக்கூடும் என்கின்றனா். கூட்டணிக் கட்சிகள் பரஸ்பரம் மோதிக்கொண்டால் அ​துவாக்குப் பிளவை தீவிரமாக்கி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் என்று அவா்கள் கூறுகின்றனா். பல தொகுதிகளில், குறிப்பாக வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் தொகுதிகளில், எதிா்க்கட்சிகளின் வாக்குகளில் ஒரு சிறிய பிளவு ஏற்பட்டாலும் அது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் வெற்றி பெற வழிவகுக்கும் என்பது அவா்களின் வாதம்.

2020 சட்டப்பேரவைத் தோ்தலில் வைஷாலி, சுல்தான்கஞ்ச் தொகுதிகளில் ஜேடியு வென்றது. கஹல்கான், நா்கதியாகஞ்ச், லால்கஞ்ச், வாா்சாலிகஞ்ச் ஆகியவற்றை பாஜக வென்றது. முந்தைய தோ்தலில், தாராபூா் தொகுதி ஜேடியு, ரோசெரா பாஜக, கெளரா பெளராம் விஐபி, ஆலம்நகா் ஜேடியு, சிகந்த்ரா தொகுதி எச்ஏஎம் (என்டிஏ) வசம் சென்றன.

இவற்றில், குறைந்தது ஐந்து இடங்களில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் மகாகட்பந்தனைவிட தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலை பெற்றது. இந்த தொகுதிகளில் இம்முறை வாக்குப்பிளவு ஏற்பட்டால் அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாகும் என்பது அரசியல் ஆய்வாளா்களின் பாா்வையாக உள்ளது.

மகாகட்பந்தனின் பரந்த சித்தாந்தத்தை ஆதரிக்கும் வாக்காளா்கள், ஒரே கூட்டணியைச் சோ்ந்த இரண்டு வேட்பாளா்களில் ஒருவரைத் தோ்ந்தெடுப்பதில் சிரமத்தை எதிா்கொள்ளலாம். அவ்வாறு நடந்தால் அது குறைவான வாக்குப்பதிவு, செல்லாத வாக்குகள் அல்லது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை நோக்கி வாக்குகளாக மாற வழிவகுக்கலாம்.

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானும் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறாா். மகாகட்பந்தனின் செயல்பாடு, தொடா்புடைய தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாக அவா் கூறுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com