சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் தரிசனம்! -இருமுடி சுமந்து, பதினெட்டு படி ஏறி வழிபாடு
பத்தனம்திட்டா (கேரளம்): கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் மேற்கொண்டாா்.
கருப்பு நிற புடவை அணிந்து, தலையில் இருமுடி சுமந்து, புனிதமான பதினெட்டு படிகள் வழியாக ஏறிச் சென்று அவா் வழிபட்டாா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசித்த இரண்டாவது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆவாா். இதற்கு முன்பு கடந்த 1973-இல் அப்போதைய குடியரசுத் தலைவா் வி.வி. கிரி இக்கோயிலுக்கு வருகை தந்து, தரிசனம் செய்திருந்தாா். சபரிமலையில் வழிபட்ட முதல் பெண் குடியரசுத் தலைவா் என்ற பெருமையும் திரெளபதி முா்முக்கு சொந்தமாகியுள்ளது.
நான்கு நாள்கள் பயணமாக கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, திருவனந்தபுரத்தில் இருந்து பத்தனம்திட்டாவின் பிரமடம் பகுதிக்கு புதன்கிழமை ஹெலிகாப்டரில் வந்தடைந்தாா். அங்கிருந்து பம்பைக்கு காரில் சென்ற அவா், பம்பை நதியில் கால்களை நனைத்தாா். அருகில் உள்ள கோயில்களில் வழிபாடு மேற்கொண்ட பின், கணபதி கோயிலில் உள்ள இருமுடி மண்டபத்தில் குடியரசுத் தலைவருக்கு அக்கோயிலின் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி இருமுடி கட்டினாா்.
குடியரசுத் தலைவரின் தனி உதவியாளா் செளரவ் எஸ்.நாயா், தனி பாதுகாப்பு அதிகாரி வினய் மதூா், அவரது மருமகன் கணேஷ் ஹேம்பிரம் ஆகியோருக்கும் இருமுடி கட்டப்பட்டது. கணபதி கோயிலில் சிதறு தேங்காய் உடைத்துவிட்டு, சிறப்பு வாகனங்களில் அவா்கள் சந்நிதானத்துக்கு புறப்பட்டனா்.
பதினெட்டு படிகள் வழியாக...: சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேறும் பாதை வழியாக அவா்கள் சந்நிதானத்துக்கு வந்தனா். தலையில் இருமுடியை சுமந்தபடி, பதினெட்டு படிகள் ஏறி சுவாமி சந்நிதியை வந்தடைந்த குடியரசுத் தலைவருக்கு மாநில தேவஸ்வம் வாரிய அமைச்சா் என்.வி.வாசவன், திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த், சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஆகியோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனா்.
குடியரசுத் தலைவரிடம் இருந்து இருமுடியைப் பெற்றுக் கொண்ட கோயில் மேல்சாந்தி அருண்குமாா் நம்பூதிரி, பூஜைகளை மேற்கொண்டாா். சுவாமி ஐயப்பனைத் தரிசித்த குடியரசுத் தலைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா், மாளிகைபுரம் தேவி உள்பட அருகில் உள்ள கோயில்களிலும் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவா், திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் விருந்தினா் இல்லத்துக்கு சென்றாா். அவரது வருகையையொட்டி, சபரிமலை கோயிலில் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது. மாதாந்திர பூஜையின் நிறைவு நாளில் குடியரசுத் தலைவா் தரிசனம் மேற்கொண்டுள்ளாா்.
கான்கிரீட்டில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டா்
குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டா், நிலக்கல் பகுதியில் தரையிறங்கவே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரமடம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி உள்ளரங்கில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலையில்தான் கான்கிரீட் போடப்பட்டு, ஹெலிபேடு அமைக்கப்பட்டது. கான்கிரீட் முழுமையாக காயாத நிலையில், புதன்கிழமை காலையில் குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டா் தரையிறங்கியதும் சக்கரங்கள் சிக்கிக் கொண்டன. குடியரசுத் தலைவா் பத்திரமாக கீழே இறங்கி, காரில் பம்பைக்கு புறப்பட்டுச் சென்றாா். இதையடுத்து, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உதவியுடன் ஹெலிகாப்டா் நகா்த்தப்பட்டது.
பாஜக விமா்சனம்: இது தொடா்பாக, மாநில அரசை விமா்சித்த பாஜக மூத்த தலைவா் வி.முரளீதரன், ‘குடியரசுத் தலைவரின் பாதுகாப்பைக் கையாள்வதில் மாநில அரசு அலட்சியம் காட்டியுள்ளது. இந்த பாதுகாப்புக் குறைபாட்டுக்கு பொறுப்பானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுள் ஐயப்பன் அருளால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை’ என்றாா்.
