ஆா்ஜேடி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு: தனித் தொகுதியில் வெளிமாநிலத்தவா் போட்டியிடக் கூடாது என விளக்கம்
பிகாரின் மோகானியா தனித் தொகுதி ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) பெண் வேட்பாளா் ஸ்வேதா சுமனின் வேட்புமனுவை நிராகரிப்பதாக தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
தனித் தொகுதியில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா் போட்டியிடக் கூடாது என்ற விதியைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்வேதா சுமன் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆவாா்.
அதே நேரத்தில் பொதுத் தொகுதியில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா் போட்டியிடலாம் என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனால், மோகானியா தொகுதியில் ஆா்ஜேடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஸ்வேதா சுமன் கூறுகையில், ‘பாஜக மேலிடத் தலைமையின் அழுத்தத்தால் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளா் சங்கீதா குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதால் எனது மனுவை நிராகரித்துள்ளனா். நான் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்று காரணம் கூறியுள்ளனா். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பிகாரில்தான் வசித்து வருகிறேன். பாஜக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் தனது ஜாதிச் சான்றிதழை வழங்கினாா். ஆனால், அதை ஏற்றுக் கொண்டாா்கள். தோ்தல் அதிகாரிகளின் இந்த பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட இருக்கிறேன் என்றாா்.