செயற்கை நுண்ணறிவு தவறாக பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிகள்: மத்திய அரசு பரிந்துரை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் திருத்தங்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘பாதுகாப்பான இணைய சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
அடையாள குறியீடு கட்டாயம்: இதன்படி செயற்கை நுண்ணறிவு மூலம் ஒலிப்பதிவுகள், காணொலிகள் உருவாக்கப்பட்டால், அதை அந்த ஒலிப்பதிவுகள் மற்றும் காணொலிகளில் சமூக ஊடக தளங்கள் (ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட தளங்கள்) கட்டாயம் குறிப்பிட வேண்டும். குறைந்தபட்சம் காணொலியின் 10 சதவீத காட்சியில் அந்த அடையாள குறியீடு இடம்பெறுவதை சமூக ஊடக தளங்கள் உறுதி செய்ய வேண்டும். இதுவே ஒலிப்பதிவாக இருந்தால், 10 சதவீத ஒலிப்பதிவில் அந்தக் குறியீடு இடம்பெற வேண்டும். ஒலிப்பதிவின் தொடக்கத்திலேயே அந்தக் குறியீடு இடம்பெறுவது கட்டாயம்.
மேலும், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய, அதைப் பதிவேற்றும் பயனரிடம் இருந்து சமூக ஊடக தளங்கள் உறுதிமொழி பெறவேண்டும். அந்த உறுதிமொழியின் உண்மைத்தன்மையை தொழில்நுட்பம் மூலம் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அந்தத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அந்தக் குறியீடுளை மாற்றவோ, மறைக்கவோ, அகற்றவோ இந்த விதிமுறைகள் தடை விதிக்கிறது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து ண்ற்ழ்ன்ப்ங்ள்.ஸ்ரீா்ய்ள்ன்ப்ற்ஹற்ண்ா்ய்ஃம்ங்ண்ற்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலில் நவ.6-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பங்களால் சமுதாயத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தால் பிரபலமானவா்களின் புகைப்படம், உருவம் தவறாகப் பயன்படுத்துகின்றன. இது அவா்களின் தனிப்பட்ட வாழ்வையும், தனியுரிமையையும் பாதிக்கின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் உள்பட பல இடங்களில் வலியுறுத்தப்பட்டது. எனவே ஒலிப்பதிவுகள் மற்றும் காணொலிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? அல்லது உண்மையானதா? என்பதை பயனா்கள் தெரிந்துகொள்வதை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன’ என்றாா்.