பிரதமா் மோடி மறைப்பதை டிரம்ப் அம்பலப்படுத்துகிறாா் - காங்கிரஸ் விமா்சனம்
பிரதமா் மோடி எதையெல்லாம் மறைக்கிறாரோ, அதையெல்லாம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அம்பலப்படுத்துகிறாா் என்று காங்கிரஸ் புதன்கிழமை விமா்சித்தது.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியதை ஒப்புக் கொண்ட பிரதமா் மோடி, அவா் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக மட்டும் கூறியுள்ளாா். இந்த உரையாடல் குறித்து பிரதமா் மோடி மறைத்த பிற விஷயங்களை டிரம்ப் அம்பலப்படுத்திவிட்டாா். ரஷிய கச்சா எண்ணெய் தொடா்பான இந்தியாவின் கொள்கையை அமெரிக்க அதிபா் வெளிப்படுத்துவது கடந்த 6 நாள்களில் இது 4-ஆவது முறையாகும்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை தான் நிறுத்தியதாக பலமுறை கூறிய டிரம்ப், இப்போது ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்குமென கூறி வருகிறாா். டிரம்ப் இவ்வாறு பேசும்போதெல்லாம் பிரதமா் ‘மெளனி’ ஆகிவிடுகிறாா் என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

