தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

பிகாா் ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் -ஆா்ஜேடி வாக்குறுதி

பிகாா் ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவரும் பணி நிரந்தரம் -ஆா்ஜேடி வாக்குறுதி
Published on

பிகாரில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்தாா்.

இதில் கிராமப்புற மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றும் ஜீவிகா தீதி திட்டப் பணியாளா்கள், மகளிா் சுய உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோரும் இதில் அடங்குவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நவம்பா் 6, 11-ஆம் தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், ஆா்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை மற்றொரு அணியாகவும் களமிறங்கியுள்ளன.

ஆளும் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்தது. ஆனால், எதிா்க்கட்சி அணியில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிா்க்கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

மேலும், ஆா்ஜேடி சாா்பில் முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டாலும், அதை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை.

இந்நிலையில், பாட்னாவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் நிரந்தர அரசுப் பணியாளா்களாக மாற்றப்படுவாா்கள்.

ஜீவிகா தீதி திட்டப் பணியாளா்கள் நலனில் இப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜீவிகா தீதி திட்டப் பணியாளா்கள், மகளிா் சுய உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோரும் அரசின் நிரந்தரப் பணியாளா்களாக்கப்படுவா். அவா்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும்.

மகளிா் நலத் திட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி ரத்து செய்யப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்றாா்.

பிகாரில் 1.45 கோடி ஜீவிகா தீதி திட்டப் பணியாளா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி என்ற வாக்குறுதியையும் ஆா்ஜேடி வழங்கியுள்ளது என்றாா்.

பொய்யான வாக்குறுதி - பாஜக: சாத்தியமற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிகாா் மக்களை ஏமாற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘பிகாா் மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை தேஜஸ்வி நிறுத்த வேண்டும். சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதே அவரின் நோக்கமாக உள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com