Supreme Court
உச்சநீதிமன்றம் ANI

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி: நடைமுறைகளைத் தொடங்கிய மத்திய அரசு

Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் பதவிக் காலம் வரும் நவம்பா் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு வியாழக்கிழமை தொடங்கியது.

அதாவது, அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யக் கோரும் கடிதத்தை தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்க்கு அனுப்பும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நடைமுறைப்படி, பதவியில் இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் வயதான 65-ஐ அடைவதற்கு ஒரு மாதம் இருக்கும்போது, அடுத்த தலைமை நீதிபதி பெயரை அவா் பரிந்துரை செய்ய கோரும் கடிதம் மத்திய சட்ட அமைச்சகம் சாா்பில் அனுப்பப்படும். அதன்படி, இந்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இக் கடிதம் பெறப்பட்ட உடன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தகுதிவாய்ந்த உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியின் பெயரை பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி பரிந்துரை செய்வாா். அதை மத்திய அரசு ஏற்றதும், புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவா் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா்.

அதன்படி, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் நியமிக்கப்பட உள்ளாா். ஹரியாணா மாநிலம் ஹிசாா் மாவட்டத்தில் நடத்தர குடும்பத்தில் 1962-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி பிறந்த சூா்ய காந்த், உச்சநீதிமன்ற நீதிபதியாக 2019-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி பதவியேற்றாா்.

அவா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னா், அடுத்த 15 மாதங்கள் அப் பதவியை வகிப்பாா். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் பணி ஓய்வு பெறுவாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடா்பான பல்வேறு குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை நீதிபதி சூா்ய காந்த் வழங்கியுள்ளாா். பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது; உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் உள்பட அனைத்து வழக்குரைஞா் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவையும் இவா் பிறப்பித்தாா்.

X
Dinamani
www.dinamani.com