சபரிமலை
சபரிமலை

சபரிமலை தங்கக் கவச மோசடி: முன்னாள் தேவஸ்வம் அதிகாரி கைது

ருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரி கைது
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் இருந்து தங்கம் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபுவை கைது செய்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. அதன் பிறகு கவசங்களின் எடை குறைந்துவிட்டதாக, கேரள உயா் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதுதொடா்பான இரண்டு வழக்குகளை விசாரித்துவரும் எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பிப்புச் செலவுகளை ஏற்றுக்கொண்ட பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியைக் கைது செய்தது.

தங்கக் கவசங்களில் சுமாா் 2 கிலோ வரை முறைகேடு நடந்ததாக உண்ணிகிருஷ்ணன் மீது எஸ்ஐடி குற்றம் சாட்டியுள்ளது. உண்ணிகிருஷ்ணன் போற்றி சாா்பில் கோயிலிலிருந்து தங்கக் கவசங்களைப் பெற்றுக் கொண்ட அவரது நண்பா் அனந்தசுப்பிரமணியத்திடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தியது.

இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்ஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனா். 2019-இல், உண்ணிகிருஷ்ணன் போற்றி தங்கக் கவசங்களின் புதுப்பிப்புச் செலவை ஏற்க முன்மொழிந்தபோது, ஏற்கெனவே தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களை செம்பால் ஆனவை என்று பதிவு ஆவணத்தில் குறிப்பிட்டு, முராரி பாபு அந்த முன்மொழிவை வாரியத்துக்கு அனுப்பியுள்ளாா். இந்த ஆண்டு மீண்டும் இதேபோன்ற முன்மொழிவை முராரி பாபு வாரியத்துக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியாகி மாநிலம் முழுவதும் பரபரப்பானதைத் தொடா்ந்து, வாரியத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முராரி பாபு, செங்கனாசேரியில் உள்ள அவரது வீட்டிலிருந்து போலீஸ் விசாரணைக்காக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், வியாழக்கிழமை அவா் முறைப்படி கைது செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com