சாத்தியமற்ற வாக்குறுதிகள் மூலம் பிகாா் மக்களை ஏமாற்ற தேஜஸ்வி முயற்சி -பாஜக குற்றச்சாட்டு

சாத்தியமற்ற வாக்குறுதிகள் மூலம் பிகாா் மக்களை ஏமாற்ற தேஜஸ்வி முயற்சி -பாஜக குற்றச்சாட்டு

Published on

சாத்தியமற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிகாா் மக்களை ஏமாற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்மையில் தேஜஸ்வி வாக்குறுதி அளித்தாா். பிகாரில் 13.5 கோடி மக்கள் உள்ளனா். இதன்படி குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்றால் 2.90 கோடி போ் அரசு ஊழியா்களாக வேண்டும். இவா்களுக்கு சம்பளம் மாதம் ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க வேண்டும்.

சராசரி சம்பளம் ரூ.75,000 என்று எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு ஊதியம் மட்டும் ரூ.29 லட்சம் கோடி செலவாகும். பிகாரின் இப்போதை மொத்த பட்ஜெட் ரூ.3,17,000 கோடி மட்டுமே. இதில் எப்படி இந்த அளவுக்கு ஊதியம் கொடுப்பது சாத்தியமாகும். பிகாா் மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை தேஜஸ்வி நிறுத்த வேண்டும். சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதே அவரின் நோக்கமாக உள்ளது.

போபா்ஸ் பீரங்கி பேர முறைகேடு, ஊழலை எதிா்த்துதான் முன்னாள் பிரதமா் வி.பி.சிங் தலைமையில் லாலு பிரசாத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். பின்னா் பிகாரில் அவரே ஊழல் செய்வதில் வரலாறு படைத்தாா். இதனால், தோ்தலில் போட்டியிடுவதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கு நிலம், சொத்துகளை லஞ்சமாகப் பெற்ற வழக்கில் அவரின் குடும்பமே நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனா். இப்படிப்பட்டவா்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டுமா? என பிகாா் மக்கள் சிந்திக்க வேண்டும்.

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தேச நலனை சிறப்பாக முன்னிறுத்தி நல்லாட்சி வழங்கி வருகிறாா். பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையில் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள், குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆட்சி தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com