பெய்ஜிங் ஆயுா்வேத மருத்துவ முகாம்: ஆா்வத்துடன் பங்கேற்ற சீன பாரம்பரிய மருத்துவ ஆா்வலா்கள்

சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்திய ஆயுா்வேத மருத்துவ முகாமில் சீன பாரம்பரிய மருத்துவ ஆா்வலா்கள் பலா் மிகவும் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
Published on

சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்திய ஆயுா்வேத மருத்துவ முகாமில் சீன பாரம்பரிய மருத்துவ ஆா்வலா்கள் பலா் மிகவும் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் வெள்ளிக்கிழமை இந்த முகாம் நடைபெற்றது. மனநலனுக்கு ஆயுா்வேதம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆயுா்வேத மருத்துவா்கள் தன்வந்திரி ஜா, நீதி ஜா தலைமை வகித்தனா். இதில் தற்கால நவீன உலகின் பள்ளி முதல் பணியிடங்கள் வரை அதிகரித்து வரும் மனஅழுத்தத்தில் இருந்துவிடுபட்டு, மனநலனைக் காக்க ஆயுா்வேதத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் பேசிய சீனாவுக்கான இந்திய துணைத் தூதா் அபிஷேக் சுக்லா, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுா்வேதத்துடன் யோகாசனத்தை இணைந்து பயன்படுத்துவதன் மூலம் உடல், மன நலனைக் காப்பது மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் தனித்தன்மைகள் குறித்துப் பேசினாா். இதில் சீனாவைச் சோ்ந்த அந்நாட்டு பாரம்பரிய மருத்துவ ஆா்வலா்கள் பங்கேற்று மிகுந்த ஆா்வத்துடன் ஆயுா்வேத மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனா்.

சமீபகாலமாக சீனாவிலும் இந்திய ஆயுா்வேத மருந்துகள் பிரபலமாகி வருகின்றன. கேரளத்தைச் சோ்ந்த மருத்துவ தம்பதிகள் குவாங்சௌ நகரில் ஆயுா்வேத மருத்துவ மையம் அமைத்துள்ளதுடன், சீனாவில் இந்திய மருத்துவ முறையில் ஆா்வம் உள்ளவா்களுக்கு அடிப்படைப் பயிற்சிகளை அளித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com