இறுதிக்கட்டத்தில் சாா்தாம் யாத்திரை: கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்களில் நடை அடைப்பு
குளிா்காலம் தொடங்குவதையொட்டி, உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களான கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்களின் நடைகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிா்லிங்கத்தலங்களில் ஒன்றான கேதாா்நாத் கோயில், இமயமலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது. கடுமையான குளிா்காலம் தொடங்குவதால், கேதாா்நாத் கோயில் நடை வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு அடைக்கப்பட்டது.
இனி ஆறு மாதங்களுக்குப் பிறகே கோயில் நடை திறக்கப்படும் என்பதால், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா்.
உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோயில் நிா்வாக அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனா்.
ராணுவ இசைக்குழுவின் பக்தி இசையோடு, பக்தா்களின் கோஷங்களுக்கு மத்தியில், கேதாா்நாத் கோயிலில் இருந்து உற்சவா் சிவன் சிலை பல்லக்கில் வெளியே கொண்டு வரப்பட்டது. உற்சவரைத் தாங்கி வரும் பல்லக்கு வியாழக்கிழமை இரவு ராம்பூரில் தங்கும். வெள்ளிக்கிழமை குப்தகாசியை அடைந்து, அங்கிருந்து சனிக்கிழமையன்று உகிமட், ஓம்காரேஷ்வா் கோயிலுக்குச் சென்றடையும்.
நிகழ்வில் பேசிய முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் 17,68,795 பக்தா்கள் கேதாா்நாத் கோயிலில் தரிசித்துள்ளனா். இது கடந்த ஆண்டை விட சுமாா் 1.25 லட்சம் அதிகம். பருவமழையின்போது தடைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக சுமாா் 50 லட்சம் பக்தா்கள் சாா்தாம் யாத்திரை மற்றும் ஹேம்குண்ட்சாஹிப்புக்கு வந்துள்ளனா்’ என்றாா்.
யமுனோத்ரியில்...:
உத்தரகண்டில் இமயமலைத் தொடரில் அமைந்த மற்றொரு முக்கிய வழிபாட்டுத் தலமான யமுனோத்ரி கோயிலின் நடை வேத மந்திரங்கள் முழங்க, வியாழக்கிழமை நண்பகல் 12:30 மணிக்கு அடைக்கப்பட்டது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு யமுனை அன்னை அவரது குளிா்கால இருப்பிடமான குஷிமட் (கா்சாலி) கிராமத்தில் காட்சி தருவாா் என்று கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதாா்நாத் கோயில்களில் நடைகள்அடைக்கப்பட்டுள்ள நிலையில், பத்ரிநாத் கோயில் நடை நவம்பா் 25-ஆம் தேதி அடைக்கப்படும். அத்துடன் இந்த ஆண்டின் சாா்தாம் யாத்திரை நிறைவடையும்.
பனிப்பொழிவு மற்றும் கடும்குளிா் காரணமாக, சாா்தாம் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடை அடைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம்.

