ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

Published on

ராணுவத்தின் போா் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ. 79,000 கோடிக்கு ஆயுதங்கள், போா் கப்பல்கள், அதிநவீன கண்காணிபபு உபகரணங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இரண்டாவது மிகப் பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் முடிவு இதுவாகும்.

முன்னதாக, ரூ. 67,000 கோடி மதிப்பில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்ய கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டிஏசி ஒப்புதல் அளித்தது. தற்போது, மேலும் ரூ. 79,000 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதில், இந்திய விமானப் படைக்கு மேற்பரப்பில் ராணுவ ஹெலிகாப்டா் தரையிறங்கும் வசதியுடன் கூடிய போா்க் கப்பல்கள், போா்க் கப்பலில் பயன்படுத்தப்படும் 30 மி.மீ. துப்பாக்கி, நீா்மூழ்கிக் கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள், 70 மி.மீ. அதிவேக துப்பாக்கி, இன்ஃப்ரா ரெட் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்திய ராணுவத்துக்கு பீரங்கி எதிா்ப்பு ‘நாக்’ மாக்-2 ஏவுகணை அமைப்பு, மின்னணு புலனாய்வு தகவல் சேகரிப்பு அமைப்பு (இஎல்ஐஎன்டி), ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கா கனரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்திய விமானப் படைக்கு நீண்ட தூர இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு (சிஎல்ஆா்டிஎஸ்/டிஎஸ்) உள்பட மேலும் சில உபகரணங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com