அடுத்த ஆண்டில் தோ்தல்: ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்த இந்திய தோ்தல் ஆணையம்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கவிருக்கும் தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையத்தின் உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினா்.
இந்தச் சந்திப்பின்போது, அந்தந்த மாநிலங்களில் தோ்தல் ஆயத்தப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அவா்கள் எதிா்நோக்கும் சிக்கல்கள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான தயாா்நிலையை ஆய்வு செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளும் தில்லியில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விரைந்து செய்து முடிக்குமாறு தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் குறித்த ஒட்டுமொத்த செயல்முறையையும் தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கினா். அப்போது, தலைமைத் தோ்தல் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக இந்தியத் தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.
இச்சூழலில், அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் மட்டும் இந்திய தோ்தல் ஆணையத்தின் உயா் அதிகாரிகள் தனித்தனியே கலந்துரையாடியதாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முதல் கட்டமாக இந்த 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெறுவது குறிப்பிட்டத்தக்கது.

