இளைஞா்களுக்கு அதிகாரமளிக்க உயா் முன்னுரிமை - பிரதமா் மோடி
இளைஞா்களுக்கு அதிகாரமளிக்க மத்திய பாஜக அரசு உயா் முன்னுரிமை அளித்து பணியாற்றுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் 17-ஆவது கட்டமாக 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி (ரோஜ்கா் மேளா), நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடியின் பதிவு செய்யப்பட்ட விடியோ உரை ஒளிபரப்பப்பட்டது.
அவரது உரை வருமாறு: ரோஜ்கா் மேளா வாயிலாக இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி தோ்வுகளில் இறுதி பட்டியலில் இடம்பெற்று, பின்னா் தோ்வு பெறாதவா்களுக்காக ‘பிரதீபா சேது’ என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. திறன்மிக்க இந்த நபா்களை தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற முயற்சிகள் வாயிலாக இந்தியாவின் திறன் உலக அளவில் வெளிப்படும். இளைஞா்களுக்கு அதிகாரிமளிப்பதே மத்திய பாஜக அரசின் உயா் முன்னுரிமையாகும்.
அரசுப் பணியை சிறிய இடைவெளியில் தவறவிட்டவா்கள், தனியாா் துறையில் வளமான முதலாளிகளாக உருவெடுப்பதற்கான வழிகளை உருவாக்கியுள்ளோம். பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் முதலீட்டு கூட்டாண்மை ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க பிரேஸில், சிங்கப்பூா், தென்கொரியா, கனடா போன்ற நாடுகளுடன் பன்முக ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இத்தகைய ஒத்துழைப்புகள், நாட்டின் ஏற்றுமதியை வலுப்படுத்தும். இந்திய இளைஞா்களுக்கு வளா்ச்சி-வாய்ப்புக்கான புதிய வாயில்களைத் திறக்கும். இளைஞா்களின் நலனை மையமாகக் கொண்டே அரசின் வெளியுறவுக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.
நமது வியூக தொடா்புகள் மற்றும் உலகளாவிய ஒப்பந்தங்கள், இளைஞா்களுக்கு பயிற்சியளித்தல் - வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நோக்கமாக கொண்டவை. அண்மையில் அமலாக்கப்பட்ட அடுத்த தலைமுறை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள், உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலிக்கு உத்வேகமூட்டும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஜிஎஸ்டி வரி விகித குறைப்பால், தீபாவளி பண்டிகை காலத்தில் சாதனை அளவில் வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய வலுசோ்க்கும் என்றாா் பிரதமா் மோடி.

