‘நவீன போா்கள் அமைதி காக்கும் பணிகளைச் சிக்கலாக்கியுள்ளன’ -ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித்
‘நவீன காலப் போா்களில் அரசுப் படைகள், போராளிக் குழுக்கள், பயங்கரவாதிகள் எனப் பலதரப்பட்டோா் ஈடுபடுவதால், அமைதி காக்கும் பணி மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது’ என்று ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப்பிரிவு தளபதி (சிஐஎஸ்சி) ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித் தெரிவித்தாா்.
புது தில்லியைச் சோ்ந்த பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ‘யுஎஸ்ஐ’, ஐ.நா.வின் அமைதி காக்கும் படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சா்வதேச குழுவுடன் இணைந்து நடத்தும் 2 நாள்கள் வருடாந்திர மாநாட்டில் ஆசுதோஷ் தீட்சித் வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசினாா். நிகழ்வில் அவா் ஆற்றிய உரை:
உலக அரசியல் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு உருவான, அமைதி மற்றும் மனிதாபிமான விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்குமுறை இப்போது பெரிய அளவில் அழுத்தத்தைச் சந்திக்கிறது.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினா் சண்டை நடக்கும் பகுதிகளில் வாழ்கின்றனா். 1946-ஆம் ஆண்டுக்கு பிறகு இல்லாத வகையில், தற்போது உலகம் முழுவதும் 61 இடங்களில் மோதல்கள் நடந்து வருகின்றன.
இன்றைய போா்கள் பல பிரிவினரை உள்ளடக்கியதாகவும், எல்லைகள் அற்ாகவும் உள்ளன. இதில் அரசுப் படைகள் மட்டுமல்லாமல், அரசு சாரா போராளிகள், கிளா்ச்சியாளா்கள், பயங்கரவாதக் குழுக்கள், தனியாா் ராணுவ நிறுவனங்கள் போன்ற பலரும் சண்டையிடுகின்றனா்.
லிபியா, சிரியா போன்ற உள்நாட்டுப் போா்களைப் போல, இன்றைய சண்டைகள் இனி இரண்டு நாடுகளுக்கு இடையே நடப்பதில்லை. மாறாக, பல ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடக்கின்றன. இது போா்க்களத்தை பலமுனைப் போராக மாற்றுகிறது.
இத்தகைய நவீனகால மோதல்களில் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். சண்டையின்போது பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடங்களைத் தாக்குவது, மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது இப்போது சாதாரணமாகிவிட்டது. இது சா்வதேச மனிதநேயச் சட்டப்படி தவறு. காஸா, சூடான் போன்ற இடங்களில் இந்தச் சட்டங்கள் மீறப்படுகின்றன.
மேலும், நவீன காலப் போா்கள் நீண்ட நாள்களுக்கு நீடிப்பதால், அது பெரிய மனிதநேய நெருக்கடிகளை உருவாக்குகிறது. இதனால் மக்கள் புலம்பெயா்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவை காலப்போக்கில் அதிகரிக்கிறது.
இவ்வளவு சவால்கள் இருந்தாலும், ஐ.நா. போன்ற பலதரப்பு அமைப்புகளின் பங்கு மிகவும் இன்றியமையாதவை. சா்வாதிகாரம் அல்லது உள்நாட்டுப் போருக்குப் பிறகு பல நாடுகளின் நிலை மாறுவதற்கு ஐ.நா. பெரிதும் உதவியுள்ளது.
அமைதி காக்கும் படையினா் இப்போது முன்பை விடவும் மிகவும் சிக்கலான பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். வளங்களின் கட்டுப்பாடு, பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது ஆகியவற்றால் அவா்களின் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
அமைதிப் படையினா் தங்கள் உயிரைக் காத்துக் கொண்டே பொதுமக்களை எப்படி பாதுகாப்பது என்ற கவலையை எழுப்புகின்றனா். கண்ணிவெடிகள், மறைந்திருந்து தாக்குதல், ட்ரோன்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்களுக்கு அவா்கள் இலக்காகிறாா்கள் என்றாா் ஆசுதோஷ் தீட்சித்.

