தங்களுக்குள் மோதிக் கொள்ளும் எதிா்க்கட்சிகள் - பிகாா் பிரசாரத்தில் பிரதமா் மோடி சாடல்
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன; அக்கட்சிகளால் மக்களின் பிரச்னைக்கு தீா்வுகாண முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இண்டி கூட்டணியில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால், 12 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்து போட்டியிடும் நிலையில், பிரதமா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்.
மேலும், பிகாா் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முந்தைய சாதனைகளை முறியடித்து, அமோக வெற்றி பெறும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு நவ.6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகள் அடங்கிய இண்டி கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
பிரதமா் பிரசாரம் தொடக்கம்: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக, பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தனது பிரசாரத்தைத் தொடங்கினாா். சமஸ்திபூா், பெகுசராய் மாவட்டங்களில் நடைபெற்ற இரு பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று, அவா் பேசியதாவது:
இண்டி கூட்டணி, ஒன்றையொன்று அடித்துக் கொள்ளும் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியாகும். அதேநேரம், பிணைப்புடன் விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, வளா்ச்சியை அடிப்படையாக கொண்டது.
காங்கிரஸும், ஆா்ஜேடியும் ஊழல் மிகுந்த கட்சிகள். அதன் தலைவா்கள், ஜாமீனில்தான் வெளியே உள்ளனா். முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூரின் ‘மக்கள் நாயகா்’ பட்டத்தை திருட சிலா் முயற்சிக்கின்றனா் (ராகுல் காந்தியை ‘மக்கள் நாயகா்’ என அவரது ஆதரவாளா்கள் அழைக்கும் நிலையில், பிரதமா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்).
மூன்று மடங்கு அதிக நிதி: கடந்த 11 ஆண்டுகளில் பிகாருக்கான நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, முதலீடுகளை ஈா்க்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இம்மாநிலம் கடந்த 2005-இல் காட்டாட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டது. காட்டாட்சியின் கொடுமைகள் குறித்து இளைஞா்கள் தங்களின் பெற்றோரிடம் கேட்டறிய வேண்டும். காட்டாட்சி திரும்பி விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞா்களின் தோளில் உள்ளது.
காட்டாட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களே. எனவே, காங்கிரஸ், ஆா்ஜேடிக்கு பெண்கள் கதவடைக்க வேண்டும்.
ஆா்ஜேடி ஆட்சியில் பிகாரின் பல மாவட்டங்கள் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கானோா் கொலை செய்யப்பட்டனா். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. விரைவில் நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாடு விடுபடும்.
நிதீஷ் குமாா் தலைமையில்...: கடந்த குஜராத் பேரவைத் தோ்தலில் முந்தைய சாதனைகளை முறியடித்து, பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தோ்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை இல்லாத அளவில் வெற்றி பெறும் என்றாா் பிரதமா் மோடி.
இண்டி கூட்டணி சாா்பில் போட்டியிட ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படாததைக் குறிப்பிட்ட பிரதமா் மோடி, ‘நீண்ட கால கூட்டாளியை புறக்கணித்துவிட்டு, புதியவா்களுடன் (விகாஸ்ஷீல் இன்சான் கட்சி) கைகோா்த்ததன் மூலம் இண்டி கூட்டணியின் ஆணவம் வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.
சீதாராம் கேசரியை
அவமதித்த நேரு குடும்பம்
‘பிகாரைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் தலைவா் சீதாராம் கேசரி, இம்மாநிலத்தின் பெருமைக்குரியவா். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த தலைவா். நேரு குடும்பத்தினரின் வற்புறுத்தலால், அவா் அவமானப்படுத்தப்பட்டாா். குளியலறையில் அடைக்கப்பட்டதோடு, தெருவுக்கும் விரட்டப்பட்டாா். அவரது கட்சித் தலைவா் பதவியும் திருடப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டினாா் பிரதமா் மோடி.
கடந்த 1998-இல் காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்து சீதாராம் கேசரி நீக்கப்பட்டு, சோனியா காந்தி அப்பதவியை ஏற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கா்பூரி தாக்கூா் கிராமத்தில்...
பிகாா் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கும் முன் சமஸ்திபூா் மாவட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் பாரத ரத்னா விருதாளருமான கா்பூரி தாக்கூரின் சொந்த கிராமமான கா்பூரிக்கு வருகை தந்த பிரதமா் மோடி, அங்கு மரியாதை செலுத்தினாா். அப்போது, முதல்வா் நிதீஷ் குமாா், மத்திய அமைச்சரும் கா்பூரி தாக்கூரின் மகனுமான ராம்நாத் தாக்கூா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரான கா்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது (மரணத்துக்கு பிந்தைய கெளரவம்) வழங்கியது குறிப்பிடத்தக்கது.

