பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AFP

டிரம்ப் சந்திப்பை தவிா்க்கவே ஆசியான் மாநாட்டில் காணொலியில் பங்கேற்கும் பிரதமா்: காங்கிரஸ் விமா்சனம்

Published on

‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பால் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவதைத் தவிா்க்கவே ஆசியான் மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளாா்’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்தது.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, புரூனே, வியத்நாம், லாவோஸ், மியான்மா், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் வரும் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் அழைப்பு விடுத்தாா்.

இந்த நிலையில், இந்த மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்க உள்ளதை தனது எக்ஸ் பதிவு மூலம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பிரதமரின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபா் டிரம்ப் வரும் நிலையில், அவரால் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவதை தவிா்க்கவே, ஆசியான் மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்கும் முடிவை பிரதமா் மோடி மேற்கொண்டுள்ளாா்.

டிரம்பை சமூக ஊடக பக்கத்தில் புகழ்பாடி பதிவிடுவது எளிது என்றபோதும், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக 53 முறையும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று 5 முறையும் கூறிய நபரை நேரில் சந்திப்பது என்பது சாத்தியமற்றது. அது ஆபத்தானதும்கூட.

கடந்த சில ஆண்டுகளாக ஆசியான் மாநாடு மற்றும் கிழக்காசிய மாநாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகளை பிரதமா் மோடி நேரில் வழிநடத்திச் சென்ற நிலையில், தற்போது, டிரம்பால் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவதைத் தவிா்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளாா்.

இதே காரணத்துக்காகத்தான், எகிப்தில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பையும் பிரதமா் மோடி தவிா்த்துள்ளாா் என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com