

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியினர் ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிகாரின் சமஸ்திபூரில் உள்ள பாரத ரத்னா கர்பூரி தாக்குர் கிராமத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமஸ்திபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”பிகாரில் நல்லாட்சியை வழங்க மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்போது பிகார் புதிய உத்வேகத்தில் நகரும்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல்கிறர்கள், என்ன செய்கிறார்கள் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. அவர்கள் ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளிவந்தவர்கள்.
மகாராஷ்டிர மக்கள் எங்களுக்கு முன்பைவிட அதிக பெரும்பான்மை வழங்கினர். ஹரியாணாவில் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். ம.பி., குஜராத், உத்தரகண்டில் நீண்ட காலமாக பாஜக ஆட்சி உள்ளது. குஜராத்தில் இருபது ஆண்டுகளாக பாஜக உள்ளது. உ.பி.யில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் என்ற நிலைமையை பாஜக மாற்றியுள்ளது. இவை அனைத்து தே.ஜ. கூட்டணியின் நல்லாட்சி மற்றும் சேவையைக் குறிக்கிறது.
பிகாரில், நிதீஷ் குமார் தலைமையில் சொந்த சாதனையை முறியடித்து மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சி அமைப்போம். பிகார் மக்கள் காட்டாட்சியை அகற்றி, 2005 ஆம் ஆண்டு நிதீஷ் குமார் தலைமையிலான நல்லாட்சி தொடங்கியது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் பல தடைகளை உருவாக்கியது.
பிகார் மக்களை ஆர்ஜேடி பழிவாங்குகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உதவ விரும்பினால், கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸை அச்சுறுத்தினர்.
தற்போது ஒரு கப் தேநீரைவிட ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் குறைவு என்ற நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதனை ’சாய்வாலா’ உறுதி செய்துள்ளார். பிகார் இளைஞர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். நீங்கள் உருவாக்கும் ரீல்ஸ்கள் மற்றும் அனைத்து படைப்பாற்றல்களும் எங்கள் அரசாங்கத்தால்தான் நடந்தது.
ஆர்ஜேடி ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து பிகாரின் அடுத்த தலைமுறையினர் அழிக்கப்பட்டனர். பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தலித்துகளின் நீதிக்கான கதவுகள் மூடப்பட்டிருந்தன.
பிகார் உள்பட முழு நாட்டையில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிப்பேன் என உறுதி அளித்தேன். பிகாரில் நக்ஸலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் முதுகை உடைத்துவிட்டோம் என்பதை நான் பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் முழு நாடும் விடுபடும்.
நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.