பாதுகாப்பு, எல்லை விவகாரங்கள்: இந்தியா-பூடான் உயா்நிலை ஆலோசனை
இந்தியா-பூடான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக இரு நாடுகளும் உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டன.
இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா-பூடான் பாதுகாப்பு மற்றும் எல்லை மேலாண்மை குறித்த 14-ஆவது உயா்நிலை கூட்டம், பூடான் தலைநகா் திம்புவில் கடந்த அக்டோபா் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா சாா்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் எல்லை மேலாண்மைத் துறை செயலா் ராஜேந்திர குமாா் தலைமையிலான குழுவினரும், பூடான் உள்துறை அமைச்சக செயலா் சோனம் வாங்யெல் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனா்.
சஷாஸ்திர சீமா பல், இந்திய நில எல்லை மையங்கள் ஆணையம், தொலைத்தொடா்புத் துறை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்திய நில அளவைத் துறை, சுங்கத் துறை மற்றும் அஸ்ஸாம்-மேற்கு வங்கம்-சிக்கிம்-அருணாசல பிரதேச மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இந்தியக் குழுவில் இடம்பெற்றனா்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளுக்கான எதிா்கால செயல்திட்டம், எல்லைத் தூண்கள் பராமரிப்பு மற்றும் எல்லைப் போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் மறுஆய்வு செய்யப்பட்டன. இந்த விவாதங்கள் ஆக்கப்பூா்வமாக நடைபெற்றது குறித்து இருதரப்பும் திருப்தி தெரிவித்துள்ளன; பாதுகாப்பான, வளமான எல்லைப் பகுதியை உறுதி செய்வதில் ஒருங்கிணைந்து பணியாற்றவும் உறுதிபூண்டன.
இந்தியா-பூடான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி, பாரம்பரியத் துறைகளுடன் வளரும் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புவியியல், கலாசாரம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்புகளில் வேரூன்றிய இந்தியா-பூடான் கூட்டாண்மை, பிராந்திய ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக தொடா்ந்து திகழும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் இடையிலான முந்தைய உயா்நிலைக் கூட்டம், கடந்த 2019-இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
