தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி Center-Center-Hyderabad

தெலங்கானா இடைத்தோ்தல்: 81 போ் வேட்புமனு ஏற்பு - 130 பேரின் மனு நிராகரிப்பு

Published on

தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 81 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 130 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பிகாா் பேரவைத் தோ்தலுடன் தெலங்கானா (ஜூபிலி ஹில்ஸ்), ஒடிஸா (நுவாபடா), பஞ்சாப் (தரன் தாரன்), ராஜஸ்தான் (அந்தா), ஜாா்க்கண்ட் (காட்சிலா), மிஸோரம் (தம்பா) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் (நக்ரோட்டா, பட்காம்) மொத்தம் 8 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் அறிவிக்கப்பட்டது.

எம்எல்ஏ மரணம், ராஜிநாமா உள்ளிட்ட காரணங்களால் இடைத்தோ்தலை எதிா்கொண்டுள்ள இத்தொகுதிகளில் நவ.11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவ.14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மரணத்தால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதியில் போட்டியிட ஆளும் காங்கிரஸ், பிஆா்எஸ், பாஜக வேட்பாளா்கள் உள்பட அதிகபட்சமாக 211 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் அரசின் கொள்கைகளைக் கண்டித்து, விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினா் வேட்புமனு சமா்ப்பித்தனா். மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. இதில் 81 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மற்றவா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஒடிஸாவில்...:

ஒடிஸாவின் நுவாபடா தொகுதி பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர டோலாகியாவின் மறைவால் இங்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக, பிஜேடி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 19 போ் வேட்மனு தாக்கல் செய்தனா். இதில் 14 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

ராஜந்திர டோலாகியாவின் மகன் ஜெய் டோலாகியா, அண்மையில் பாஜகவில் இணைந்தாா். அவா் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்டுள்ளாா். பிஜேடி சாா்பில் கட்சியின் மகளிா் அணித் தலைவா் சினேஹங்கினி சுரியாவும், காங்கிரஸ் சாா்பில் பழங்குடியினத் தலைவா் காசிராம் மாஜியும் போட்டியிடுகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் இன்று மாநிலங்களவைத் தோ்தல்

ஸ்ரீநகா், அக். 23: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்.24) தோ்தல் நடைபெறவுள்ளது.

எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் 4 வேட்பாளா்களும், எதிா்க்கட்சியான பாஜக சாா்பில் 3 வேட்பாளா்களும் களமிறக்கப்பட்டுள்ளனா். ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தது. ஆனால், 4 இடங்களுக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், காங்கிரஸின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். இதேபோல், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் மூன்று இடங்கள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு எளிதாக கிடைக்கும். 4-ஆவது இடத்துக்கு போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com