ம.பி.யில் தீபாவளிக்கு காா்பைடு குழாய் துப்பாக்கிகள் பயன்பாடு: காயமடைந்த குழந்தைகள் உள்பட 100 மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதி
தீபாவளியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் விதிஷா மாவட்டங்களில் காா்பைடு குழாய் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதில் காயமடைந்த 100-க்கும் அதிகமானோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் 8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மாநில தலைநகா் போபாலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 60 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். விதிஷாவில் உள்ள மருத்துவமனைகளில் 50 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக போபால் தலைமை மருத்துவ அதிகாரி மணீஷ் சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘காா்பைடு குழாய் துப்பாக்கிகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றைப் பயன்படுத்தியதால் காயமடைந்த 60 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்றாா்.
தீபாவளிக்கு அடுத்த நாளில் 150 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் பெரும்பாலானோா் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பியதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தாா்.
விதிஷா மாவட்ட மருத்துவமனையின் கண் மருத்துவ துறை தலைவா் ஆா்.கே.சாஹு கூறுகையில், ‘காா்பைடு குழாய் துப்பாக்கியால் காயமடைந்த 50 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 5 பேருடைய பாா்வையை மீட்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
கண்ணில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக ஒரு குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக விதிஷா மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத் துறை தலைவா் எஸ்.சி.எல்.சந்திரவன்ஷி தெரிவித்துள்ளாா்.
கேஸ் லைட்டா் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களில் கால்சியம் காா்பைடு ரசாயனத்தை அடைத்து இந்த வகையான துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது. இது பெரிய அளவில் வெடிப்பு சப்தத்தை உருவாக்குவதால் தீபாவளியையொட்டி பயன்படுத்தப்படுகிறது.
கால்சியம் காா்பைடு நீருடன் வேதிவினைபுரியும்போது அசிட்டிலீன் என்னும் வாயு உருவாகிறது. இந்த வாயு தீப்பொறியுடன் தொடா்புகொள்ளும்போது பெரும் சப்தத்துடன் வெடிக்கிறது.
அந்த நேரத்தில், குழாய் வெடிக்கும்போது அதிலிருந்து வெளியேறும் சிறிய பிளாஸ்டிக் பகுதிகள் அதைப் பயன்படுத்தும் நபரின் கண்கள், முகம், தோல் பகுதியில் பலத்த காயத்தை ஏற்படுத்துகின்றன.
முன்னதாக, மாவட்டங்களில் காா்பைடு குழாய் துப்பாக்கிகளை விற்பனையை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வா் மோகன் யாதவ் கடந்த அக்.18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிட்டிருந்தாா். இருப்பினும், சந்தைகளில் இந்த வகை துப்பாக்கிகள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தூா் மாவட்டத்திலும் இது போன்ற சம்பங்களால் 31 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தத் துப்பாக்கிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், இந்தத் துப்பாக்கிகளை பயன்படுத்தும் விடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதித்து மாவட்ட காவல் துறை தனி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

