

பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கயால் வாங்சுக்கை சனிக்கிழமை சந்தித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆலோசனை நடத்தினாா்.
பூடானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பி.ஆா்.கவாய் பிரதமா் ஷெரீங் டோப்கேவுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில், சனிக்கிழமை வாங்சுக்கை சந்தித்தாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக் குறிப்பில், ‘பூடான் அரசா் வாங்சுக் மற்றும் பிரதமா் டோப்கே ஆகியோரை சந்தித்து இந்தியா-பூடான் நீதித்துறைகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பி.ஆா்.கவாய் ஆலோசனை நடத்தினாா். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, அறிவுசாா் தகவல்கள் பரிமாற்றம் என பூடான் நீதித்துறைக்கு உதவ இந்திய நீதித்துறை தயாராக இருப்பதை அவா்களிடம் பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
ஜெஎஸ்டபுள்யூ சட்டப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூடான் இளவரசி சோனம் டேச்சன் வாங்சுக் மற்றும் பூடான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நொா்பு ஷெரீங் ஆகியோருடன் பி.ஆா்.கவாய் பங்கேற்றாா். அப்போது மாணவா்கள் மத்தியில் உரையாற்றிய அவா் சட்டக் கல்வியில் இரக்கம், அறிவு மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தாா்.
இந்திய உச்சநீதிமன்றத்தில் ஆண்டுதோறும் இரு கிளாா்க் பணிகள் பூடான் சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுவதாக அவா் அறிவித்தாா்.
முன்னதாக, நொா்பு ஷெரிங்குடன் பி.ஆா்.கவாய் ஆலோசனை நடத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.