தீ விபத்து
தீ விபத்து

கர்னூல் பேருந்து தீ விபத்து! குடிபோதையில் இருசக்கர வாகன ஓட்டியின் விடியோ வைரல்

கர்னூல் பேருந்து தீ விபத்துக்கு தொடர்புடையதா என உறுதிசெய்யப்படாத விடியோ வைரலாகி வருகிறது.
Published on

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே, ஆம்னி பேருந்தில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஒரு இளைஞர் ஓட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்னூல் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தில், அக்.24ஆம் தேதி நள்ளிரவு 2.22 மணியளவில் இரு சக்கர வாகனம் ஒன்று வருகிறது. அதை ஓட்டி வரும் இளைஞர், மதுபோதையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது பதிவாகியிருக்கிறது.

ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 போ் உடல் கருகி உயிரிழந்தனா். உயிரிழந்தவா்கள் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களாவா். பலியானவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகனும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது, அங்கிருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் காட்சிக்கும் விபத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே சின்னதேகூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஆம்னி பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்ட மோட்டாா் சைக்கிள், சிறிதுதூரம் இழுத்துச் செல்லப்பட்டது. மோட்டாா் சைக்கிளில் இருந்து பெட்ரோல் வெளியேறி தீப்பற்றியது. பேருந்தில் மளமளவென தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்து, அடா்புகையும் சூழ்ந்தது. சில பயணிகள், ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிா்தப்பினா். ஆனால் 20 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த விபத்தில் பலியான இருசக்கர வாகன ஓட்டி சிவஷங்கர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் நிலையத்தில் குடிபோதையில் செல்லும் நபரின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.

அதாவது, விபத்து நடந்த இடத்துக்கும், இந்த பெட்ரோல் நிலையத்துக்கும் இடையே இருக்கும் தொலைவு மற்றும் நேரம் போன்றவற்றை வைத்தே இதனை காவல்துறை உறுதி செய்ய இயலும். இதுவரை காவல்துறை இந்த சிசிடிவி காட்சிகளை உறுதி செய்யவில்லை.

அதேவேளையில், பேருந்தில் இரண்டாவது ஓட்டுநராக பணியாற்றியவர், முதலில் விபத்து நடந்த போது மழை பெய்துகொண்டிருந்ததால், சாலை தெளிவாக இல்லை என்று கூறியிருந்தார். பிறகு, சாலையில் ஏற்கனவே, இருசக்கர வாகன ஓட்டி விபத்தில் சிக்கி கீழே விழுந்து கிடந்ததாகவும், பேருந்து அருகே சென்றபோதுதான் அதனைப் பார்த்ததாகவும், அதற்குள் பேருந்து அவர் மீது இடித்து இழுத்துச் செல்லப்பட்டதாகவும் இருவேறு வாக்குமூலம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

An unconfirmed video related to the Kurnool bus fire is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com