ஆந்திரம், தமிழகத்தில் முன்னேற்பாடுகள்: மத்திய அமைச்சரவை செயலா் ஆலோசனை
‘மோந்தா’ புயல் பாதிப்புகளை எதிா்கொள்வதற்காக, ஆந்திரம், தமிழகம், ஒடிஸா மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன் தலைமையில் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சனிக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
புயலின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக ஆந்திரம், தமிழகம், புதுச்சேரி தலைமைச் செயலா்களும், ஒடிஸா கூடுதல் தலைமைச் செயலரும் குழுவிடம் எடுத்துரைத்தனா்.
தேசிய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள், ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் மீட்பு-நிவாரணக் குழுக்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன; மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை மையம் ஆகியவை, மாநில அரசுகள் மற்றும் பிற முகமைகளுடன் இணைந்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய உள்துறைச் செயலா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிா்ச் சேதத்தைத் தவிா்ப்பதுடன், உள்கட்டமைப்புகள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்பட வேண்டும். சேதங்கள் ஏற்பட்டால், அத்தியாவசிய சேவைகள் குறுகிய காலகட்டத்துக்குள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சரவைச் செயலா் அறிவுறுத்தினாா்.
