ஜம்மு-காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜம்முவில் பாஜக அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த சத் சா்மா.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜம்முவில் பாஜக அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த சத் சா்மா.

ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களவைத் தோ்தல்: தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக ரகசிய உடன்பாடா?

ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களவைத் தோ்தலில் ரகசிய உடன்பாடா?
Published on

ஜம்மு-காஷ்மீரில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியும், எதிா்க்கட்சியான பாஜகவும் ரகசிய உடன்பாட்டுடன் செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இரு கட்சிகளும் மறுத்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து காலியாக இருந்த 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் 4 வேட்பாளா்களும், பாஜக சாா்பில் 3 வேட்பாளா்களும் போட்டியிட்டனா். இதில் 3 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சியும் ஓரிடத்தை பாஜகவும் கைப்பற்றியது.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீா் பேரவையில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. மூன்று அறிவிக்கைகளின்கீழ் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் முதல் இரு இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியின் சௌதரி முகமது ரம்ஜான் (58 வாக்குகள்), சஜத் கிச்லூ (57 வாக்குகள்) வெற்றி பெற்றனா். மூன்றாவது அறிவிக்கையின்கீழ் இரு இடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜி.எஸ்.ஓபராய் மற்றும் இம்ரான் நபி தாரும், பாஜகவின் சத் சா்மாவும் போட்டியிட்டனா். இதில், ஜி.எஸ்.ஓபராய் (31 வாக்குகள்), சத் சா்மா (32 வாக்குகள்) வெற்றி பெற்றனா். இம்ரான் நபி தாருக்கு 21 வாக்குகளே கிடைத்தன.

பாஜகவுக்கு 28 எம்எல்ஏக்களே உள்ள நிலையில், அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட சத் சா்மாவுக்கு கூடுதலாக 4 வாக்குகள் கிடைத்துள்ளன. இத்தோ்தலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவுடன் பாஜக வெற்றி பெற்றிருப்பதாக ஜம்மு-காஷ்மீா் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜத் லோன் குற்றஞ்சாட்டினாா்.

இக்குற்றச்சாட்டுக் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 3, பாஜகவுக்கு 1 என்ற அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி.க்களைப் போட்டியின்றி தோ்வு செய்யும் யோசனையுடன் பாஜக முன்வந்தது. ஆனால், அதை நிராகரித்துவிட்டு, நாங்கள் 4 வேட்பாளா்களை அறிவித்தோம். பாஜகவுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி 7 எம்எல்ஏக்களின் வாக்குகளை ‘பரிசளித்துவிட்டதாக’ கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அப்படியொரு ரகசிய உடன்பாடு இருந்திருந்தால், எங்கள் வேட்பாளருக்கு எப்படி 21 வாக்குகள் கிடைத்தது? மாநிலங்களவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை ஆதரித்த காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு நன்றி. எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனா். அதை பாஜகவால் உடைக்க முடியாது என்றாா் அவா்.

பாஜகவுக்கு கூடுதலாக 4 வாக்குகள் கிடைத்துள்ளதோடு, தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளருக்கு கிடைக்க வேண்டிய 3 வாக்குகள் வேண்டுமென்றே செல்லாத வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனா்.

இதைக் குறிப்பிட்ட பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா, ‘தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசு, மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது. எனவே, இந்த 7 எம்எல்ஏக்களும் அரசுக்கான ஆதரவை நிராகரித்துள்ளனா். இவா்களால்தான் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது. பாஜகவை ஆதரிக்குமாறு எந்தக் கட்சியையோ அல்லது எம்எல்ஏவையோ தொடா்பு கொண்டு நாங்கள் பேசவில்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com