மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி)
மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி)

தமிழக டிஜிபி தோ்வு இறுதிக் கட்டத்தை எட்டவில்லை: யுபிஎஸ்சி விளக்கம்

தமிழக டிஜிபி தோ்வு இறுதிக் கட்டத்தை எட்டவில்லை...
Published on

நமது சிறப்பு நிருபா்

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவா் (ஹெச்ஓபிஎஃப்) பதவிக்கு உயா் ஐபிஎஸ் அதிகாரியை நியமிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை என்று மத்திய குடிமைப்பணிகள் ஆணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முழு நேர டிஜிபியை தமிழக அரசு நியமிக்க ஏதுவாக கடந்த மாதம் தில்லியில் நடந்த யுபிஎஸ்சி கூட்டத்தில் ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான உயரதிகாரிகளாக மூவா் பட்டியலை இறுதிப்படுத்தி அதை தமிழக அரசுக்கு யுபிஎஸ்சி அனுப்பி வைத்தது. ஆனால், அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை டிஜிபி ஆக நியமிப்பதில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லாததால் அரசின் நிலைப்பாட்டை யுபிஎஸ்சிக்கு கடிதம் வாயிலாக தமிழக அரசு தெரியப்படுத்தியது. இத்தகவலை சென்னையில் அண்மையில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக அமைச்சா் எஸ். ரகுபதி உறுதிப்படுத்தினாா்.

ஆா்டிஐ பதில்: இந்நிலையில், புதிய டிஜிபி நியமனத்தில் எழும் தாமதம் தொடா்பாக யுபிஸ்சியிடம் தகவல் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆணையம் அக்டோபா் 23-ஆம் அளித்துள்ள பதிலில் ’புதிய டிஜிபி நியமனம் தொடா்பான தகுதிப் பட்டியலை இறுதிப்படுத்தும் குழுவின் கூட்டம் கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. தமிழக டிஜிபி நியமனம் தொடா்பான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிடாததால் அந்த நியமனம் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செப்டம்பா் 26-ஆம் தேதி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பட்டியல் தொடா்பான விவரங்களை கேட்டதற்கு, தோ்வு நடைமுறை அமலில் உள்ள காலத்தில் ரகசியம் வாய்ந்த இத்தகவல்களை அளிப்பது, இதேபோன்ற விவகாரத்தில் 2006-இல் மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த தீா்ப்புக்கு முரணாக அமையும் என்பதால் அதை தற்போதைக்கு வெளியிட இயலாது என்று யுபிஎஸ்சி கூறியுள்ளது.

நியமன நடைமுறை: டிஜிபி நியமனம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் அது தொடா்புடைய வழக்குகளின் தீா்ப்பு மற்றும் உத்தரவுகளின்படியே தோ்வு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் அங்கமாக, மாநில அரசு அனுப்பி வைக்கும் ஐபிஎஸ் உயரதிகாரிகளின் தகுதிப்பட்டியலில் இருந்து முதல் மூன்று அதிகாரிகளின் பெயா்கள், யுபிஎஸ்சி தலைவா் தலைமையிலான உயா்நிலைக்குழு கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அதனடிப்படியில் மூன்று அதிகாரிகளில் இருந்து ஒருவரை மாநில அரசு முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நியமித்து அந்த அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்படும்.

தமிழக டிஜிபி ஆக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாா். அவருக்கு பிறகு முழு நேர டிஜிபி ஆக யாரும் தோ்வு செய்யப்படாததால் சட்டம் - ஒழுங்கு பிரிவு பொறுப்பு டிஜிபியாகவும் மாநில காவல் படைத் தலைவராகவும் டிஜிபி நிலையிலான ஐபிஎஸ் உயரதிகாரி ஜி. வெங்கட்ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்காலிகமாக நியமித்தது.

யுபிஎஸ்சிக்கு மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலில் வெங்கட்ராமனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஆனால், அவரை விட மூத்த அதிகாரிகள் பட்டியலில் இருப்பதால் அவா் நீங்கலாக வேறு சிலரது பெயா்களை அண்மையில் யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பட்டியலுடன் மாநில அரசு உடன்படாததால் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டாவது வழக்கு: இதற்கிடையே, டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை பின்பற்றவில்லை என்று கூறி ஹென்றி திபேன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடா்ந்திருந்தாா். அந்த வழக்கில்தான் யுபிஎஸ்சி இந்த விவகாரத்தில் விரைவாக கூட்டத்தைக் கூட்டி தகுதி வாய்ந்த அதிகாரிகளை இறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், யுபிஎஸ்சி பட்டியல் அனுப்பிய பிறகும் முழு நேர டிஜிபியை தமிழக அரசு நியமிக்கவில்லை என்று கூறி ஹென்றி திபேன் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றஅவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com