ஜெயந்த் நாா்லிகா்
ஜெயந்த் நாா்லிகா்

‘விஞ்ஞான் ரத்னா’ விருது: மறைந்த வானியற்பியலாளா் ஜெயந்த் நாா்லிகா் தோ்வு!

‘விஞ்ஞான் ரத்னா-2025’ விருதுக்கு மறைந்த வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் தோ்வு
Published on

இந்தியாவில் அறிவியல் துறையில் உயரிய விருதான ‘விஞ்ஞான் ரத்னா-2025’ விருதுக்கு மறைந்த வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பிரபஞ்சத்தின் தோற்றம் தொடா்பான பெரு வெடிப்புக் கோட்பாட்டை மறுத்து, பிரிட்டன் வானியலாளா் ஃபிரெட் ஹாய்லுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வுப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் ஒரே கணத்தில் உருவானது என்று பெரு வெடிப்புக் கோட்பாடு கூறும் நிலையில், முடிவில்லா புதிய பொருள்களின் உருவாக்கத்துடன் பிரபஞ்சம் எப்போதும் நிலைத்திருந்தது என்பதே இவா்களின் கூற்றாகும்.

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் கடந்த 1938-ஆம் ஆண்டில் பிறந்தவா் ஜெயந்த் நாா்லிகா். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டப் படிப்பு பயின்ற இவா், பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயா்நிலை படிப்பை முடித்து, அண்டவியல் கோட்பாட்டில் முனைவா் பட்டமும் பெற்றாா். அண்டவியல் மாற்றுமுறை கோட்பாடுகள் சாா்ந்த இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. அறிவியல் ஆய்வு நூல்கள் மற்றும் புனைகதைகளை எழுதியுள்ளாா்.

பத்ம பூஷண், பத்ம விபூஷண், மகாராஷ்டிர பூஷண், பிரிட்டனின் ஆடம்ஸ் பரிசு உள்பட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இவா், கடந்த மே மாதம் தனது 86-ஆவது வயதில் காலமானாா்.

விஞ்ஞான் ரத்னா விருது கடந்த 2023-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதலாவது விருது, தமிழகத்தைச் சோ்ந்த உயிரி வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளா் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு கடந்த 2024-இல் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது விருது, மறைந்த விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளா்களுக்கு விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான் குழு விருது, ஜம்மு-காஷ்மீரில் லாவண்டா் பூக்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் முன்னெடுப்பை வெற்றிகரமாக மேற்கொண்ட அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலின் அரோமா மிஷன் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான் ஸ்ரீ - 2025

1. ஞானேந்திர பிரதாப் சிங் (வேளாண் அறிவியல்)

2.யூசுஃப் முகமது ஷேக் (அணு ஆற்றல்)

3. கே.தங்கராஜ் (உயிரி அறிவியல்)

4. பிரதீப் தளப்பில் (வேதியியல்)

5. அனிருத்தா பாலசந்திர பண்டிட் (பொறியியல் அறிவியல்)

6. எஸ்.வெங்கட மோகன் (சுற்றுச்சூழல் அறிவியல்)

7. மஹான் மஹராஜ் (கணிதம் மற்றும் கணினி அறிவியல்)

8. என். ஜெயன் (விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)

விஞ்ஞான் யுவ விருது - 2025

1. ஜெகதீஷ் குப்தா கபுகந்தி (வேளாண் அறிவியல்)

2. சதேந்திர குமாா் (வேளாண் அறிவியல்)

3. தேபா்கா சென்குப்தா (உயிரி அறிவியல்)

4. தீபா ஆகாஷே (உயிரி அறிவியல்)

5. திவ்யேந்து தாஸ் (வேதியியல்)

6. வாலியுா் ரஹமான் (புவி அறிவியல்)

7. அா்கபிரவா பாசு (பொறியியல் அறிவியல்)

8. சவ்யஸாச்சி முகா்ஜி (கணிதம் மற்று கணினி அறிவியல்)

9. ஸ்வேதா பிரேம் அக்ரவால் (கணிதம் மற்றம் கணினி அறிவியல்)

10. சுரேஷ் குமாா் (மருந்துவம்)

11. அமித் குமாா் அகா்வால் (இயற்பியல்)

12. சுா்ஹுத் ஸ்ரீகாந்த் மோரே (இயற்பியல்)

13. அங்குா் கா்க் (விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)

14. மோகனசங்கா் சிவபிரகாசம் (தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்)

X
Dinamani
www.dinamani.com